Apr 23, 2011

ஸ்டெர்லைட் ஆலை!! போராட்டம் தொடரும் வைகோ!!

APRIL 24, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து வைகோ இன்று அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர், ’’மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.

தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்டது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை.

சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள்.

பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவார் அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது. குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல் போனது.

தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அ.தி.மு.க. அரசின் அனுமதியையும், காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டல் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக்கூடாது என்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் வரையறுத்த சட்டவிதியை மீறி, 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி, 250 மீட்டர் சுற்றளவுக்கு, அடர்த்தியான பசுமைச்சூழல் அமைக்க வேண்டும் என்று, முதலில் நிபந்தனை விதித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருசில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18 ஆம் நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

மன்னார் வளைகுடாவில் உள்ள வான்தீவு, கசுவர், கரைச்சல்லி, விளாங்கு சல்லி ஆகிய தீவுகள், ஆலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே அமைந்து உள்ளன.
தூத்துக்குடி வட்டார மக்களும், மீனவர்களும், விவசாயிகளும், பொதுநல அமைப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க.வும், தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மதிமுக, 96 டிசம்பர் 9 ஆம் நாள், என் தலைமையில் 20,000 க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை அறப்போர் நடத்தியும், 97 ஏப்ரல் 20 ஆம் நாள், தூத்துக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் என் தலைமையில் மறியல் செய்து, பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம்.

பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை, பல்லாயிரக் கணக்கானவர்களோடு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டோம். 97 ஆகஸ்ட் 30 ஆம் நாள், 25,000பேர் பங்கு ஏற்ற ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போரை என் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு மீது, 98 டிசம்பர் 9 ஆம் நாளில் இருந்து 14 ஆம் தேதி வரையிலும், நானே வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினேன்.
வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.

2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு எலைட் தர்மாராவ், மாண்புமிகு பால் வசந்தகுமார் அமர்வு நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, ஆணை பிறப்பித்தது.

அதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தற்காலிகத் தடை ஆணை பெற்று உள்ளது. நிரந்தரமாக மூட வேண்டும் என்று நானும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு முறையும் பங்கு ஏற்றேன்.

கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் அன்று, உச்சநீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக்கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆய்வு நடத்தி, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின்போது, எதிர்மனுதாரர்களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல், 6,7,8 தேதிகளில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆலை வளாகத்துக்குள் மண், நீர், மாதிரிகளை சோதனைக்கு இம்முறை எடுப்பது இல்லை என்று நீரி நிறுவனம் கூறியது.

நான் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில், மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், நம்முடைய தரப்பில் மாதிரிகள் எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மண்டலத்தில் ஏற்படும் மாசு, நச்சுத்தன்மையைக் கண்டு அறியத் தேவையான கருவிகளை, நீரி ஆய்வுக்குழு கொண்டு வரவில்லை.

மீண்டும் ஆய்வு ஏப்ரல் 19 ஆம் நாள் தொடங்கியது. இதில், நானும், சுற்றுச்சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

அந்த அறிக்கையைக் கண்டபிறகே, அதுகுறித்து நம்முடைய கருத்துகளைத் தெரிவிக்க இயலும். விவசாயிகள், மீனவர்களின் வாழ்வு ஆதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் நாசமாவதால் ஏற்படும் நோய்களில் இருந்து பொதுமக்களை, குறிப்பாகக் குழந்தைகளைப் பாதுகாக்கவும், தூய நோக்கத்தோடு நாம் மேற்கொண்டு உள்ள, நீதிக்கான அறப்போராட்டத்தை நம்பிக்கையோடு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments: