Mar 14, 2011

முஸ்லிம்களுக்கு இன்னுமா உறக்கம்? : ஏர்வை ரியாஸ்!!

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவமிருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை.

திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்!

இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டளித்த முஸ்லிம்கள் சமீப ஆண்டுகளாக அரசியல் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். முஸ்லிம்கள் தங்களின் பலத்தை காண்பிக்க வேண்டும் என்ற கருத்து வேகமாக ஒலித்து வருகிறது. திருமாவளவனையும் ராமதாசையும் இவர்கள் உதாரணமாக கூறி வருகின்றனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை இனம் கண்டு வெளியிட்டனர்.

பெரும்பான்மையினரின் கூற்று 'நாம் இனியும் யாருக்கும் ஓட்டளித்து ஏமாறக் கூடாது. நாம் தனித்து போட்டியிட வேண்டும்' என்பதாகவே இருந்தது. கருத்துக்களை தாங்கள் கூறிய அடுத்த நிமிடத்திலேயே மற்றவர்கள் இதனை ஏற்று செயல்பட வேண்டும் என்று விரும்பினர். இது நடக்காது போகவே முஸ்லிம்களின் இயக்கங்களையும் தலைவர்களையும் வசைமாறி பொழிய ஆரம்பித்தனர்.

ஆனால் இனியும் இவர்கள் இதனை தொடர முடியாது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா இந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக தாங்கள் போட்டியிடப் போகும் ஆறு தொகுதிகளையும் அறிவித்துள்ளனர். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் கேரளாவின் உள்ளாட்சி தேர்தல்கிளல் வெற்றி எண்ணிக்கையை தொடங்கியுள்ளனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு கட்சி அல்ல. தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு கட்சி.

முஸ்லிம்களுக்கு ஐந்து சதவிகித இடஒதுக்கீடு, வக்ஃப் சொத்துக்களை முறைப்படுத்துதல், தேர்தலில் முஸ்லிம்களுக்கு பத்து தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொள்வது என்ற நிலைப்பாட்டை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா முன்வைத்தது. ஆனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த கட்சியும் முன் வராத நிலையில் தனித்து போட்டியிடுவது என்ற முடிவை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா எடுத்துள்ளது.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைவதை எந்த கட்சியும் விரும்பவில்லை என்பதை தான் இக்கட்சிகளின் நிலைப்பாடு நமக்கு உணர்த்துகிறது. இச்சூழலில் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் முடிவு சரியான முடிவாகவே நமக்கு படுகிறது.
தற்போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ஒரு தெளிவான முடிவை எடுத்துள்ளது. இனியும் கட்சிகளும் இயக்கங்களும் எதுவும் செய்யவில்லை என்று காரணங்களை சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இனி இவர்களுக்கு முழுமையான ஆதரவை தெரிவிப்பதுதான் மக்களின் கடமை.

தேர்தலில் போட்டியிடும் மற்ற முஸ்லிம் கட்சிகளும், பிற கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களும் எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடாமல் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை முற்றிலும் விரும்பாத திராவிட கட்சிகளும் அவர்களின் கூட்டாளிகளும் நிச்சயம் இந்த முயற்சியை மேற்கொள்வார்கள். எஸ்.டி.பி.ஐ. போட்டியிடும் தொகுதிகளில் தங்களின் சார்பாக முஸ்லிம் வேட்பாளர்களையோ அல்லது தங்கள் கூட்டணியில் உள்ள முஸ்லிம்களுக்கு இத்தொகுதிகளை வழங்குவதற்கு முன்வருவார்கள். இந்த வலையில் முஸ்லிம்கள் சிக்கி விடக்கூடாது.

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக் இரண்டு தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்களும் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்கள் முயற்சிக்க வேண்டும். முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் சிலரின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு சமுதாய நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

சந்திக்கும் முதல் தேர்தலிலேயே வெற்றியை அடைய வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எல்லாம் எதுவும் கிடையாது. இனியும் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை பிற கட்சிகள் உணர வேண்டும். அதற்கு இத்தேர்தலை முஸ்லிம்கள் முறையாக பயன்படுத்த வேண்டும்.

'எதுக்குங்க தனியா நிக்கனும்?''எதுக்கு கூட்டணியில நிக்கனும்?' என்று ஹாயாக உட்கார்ந்து கொண்டு கேள்விகளை கேட்காமல் முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்திற்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். அரசியல் பலம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பதை இன்று பாமரர்களும் அறிந்து கொண்டார்கள். முஸ்லிம்களுக்கு இன்னுமா உறக்கம்?

நன்றி : ஏர்வை ரியாஸ்.

1 comment:

Anonymous said...

கண்டிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் ஒற்றூமையுடன்
SDPI கு ஓட்டு போட்டு தங்கள் மார்க ஒற்றூமை யை காட்ட வேண்டும்