போபால் போன்று ஒரு பெரும் அழிவுக்கு உட்பட வேண்டிய நிலையிலிருந்து பாண்டிச்சேரியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தப்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த ஜனவரி 26 அன்று காலை சுமார் 7-30 க்கு குடியரசு தின அணி வகுப்புகளும் கலை நிகழ்சிகளும் பாண்டிச்சேரியின் கடற்கரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாண்டிச்சேரியின் இன்னொருபுறம் காலாப்பட்டு என்ற இடத்திலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனையை நோக்கிச் சென்றுள்ளனர்.
குளோரின் வாயுவைக் கொள்கலனுக்குள் நிரப்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகக் கசிந்துள்ளது. இவ்வாறு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் “குளோரின் உணர்கருவி” அன்று வேலை செய்யவில்லை. ஆனாலும் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளி அதை உணர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு உடனடியாக அதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு கசிவை தடுத்து நிறுத்தி விட்டார். காற்று சற்று பலமாக இருந்ததால் தென்பகுதியில் கொஞ்சம் பரவி விட்டது.”
கெம்ஃபாப் அல்காலிஸ் லிமிடெட் (Chemfab Alkalis Limited) , பாண்டிச்சேரியிலுள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் ஆலை இது. நாளொன்றுக்கு 106டன் காஸ்டிக் சோடாவும், சுமார் 90 டன் திரவ குளோரினும், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஹைப்போ குளோரைட், ஹைட்ரஜன் வாயு போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு இதே போல பெரிய கெமிக்கல் ஆலை ஒன்று கடலூரில் உள்ளது. பாண்டிச்சேரி தவளக்குப்பம் என்னுமிடத்தில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலையும் பிரச்சினையால் மூடப்பட்டுவிட்டது.
போபால் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது? கொள்கலனுள் வைக்கப்பட்ட மிதைல் சயனேட் என்ற வாயு குளிரூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த குளிரூட்டும் எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள் இதனை முறையிட்டும் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. சில டிகிரி வெப்பம் ஏற கொள்கலன் வால்வுகள் வெடித்து விஷவாயு வெளியேறி விட்டது. பல இலட்சம் மக்களின் வாழ்க்கையே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.
கெம்ஃபாப் நிறுவனத்திலுள்ள எச்சரிக்கை மணி குளோரின் கசிந்தால்தான் வேலை செய்யும். அதனால் அது வேலை செய்கிறதா இல்லையா? என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எதேச்சையாக அந்த தொழிலாளி கவனித்து விட்டதால் (அதுவும் இரண்டு நிமிடத்தில்) வால்வை அடைத்து நிறுத்தி விட்டார். போபாலில் பழுது பார்க்கச் சொன்னதையே பழுது பார்க்காத முதலாளித்துவம் பழுதா, இல்லையா என்று தெரியாததை பழுது பார்க்குமா? முதலாளித்துவத்தின் இலாப விதிதான் அதனை அனுமதிக்குமா? அப்படி முறையாக பராமரித்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
இரண்டே நிமிடம்தான் அதற்குள் அந்த தொழிலாளி அதை அடைத்து விட்டார் அந்த இரண்டு நிமிடக் கசிவு அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுப்படியே 395 பேருக்கு பாதிப்பு, அதில் குழந்தைகள் 13 பேர்.
இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவிலேயே பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி. புதுவை சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள நான்கு ஊர்களின் மக்களையும் சேர்த்தால் 30,000- பேர் இப்பகுதியிலேயே வசிக்கிறார்கள். இந்த முதலாளித்துவ அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?.
நன்றி: வினவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment