Feb 20, 2011

மாட்டு இறைச்சியும்!! தீண்டாமையும்!! : ஒரு சமூக பார்வை!

சாதிய அமைப்பில் புனிதமானவர்கள் & தீண்டத்தகாதவர்கள் என்று இரண்டு எதிரெதிர் பிரிவினர்களை உருவாக்குவதற்கு இந்துத்துவ வளர்ச்சிக்கானப் பண்பாட்டு அரசியல் குறியீடாக இருந்து வருகின்ற பசுவும் முக்கியமாகப் பயன்படுகின்றது. பசுவை புனிதமாகப் போற்றுகின்ற மக்கள் புனிதமானவர்களாகவும், பசு உணவினை உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டிருக்கின்றனர்.

பொதுவாக இன்று இறைச்சிக் கடைகளில் சென்று மாட்டிறைச்சி வாங்குவதுபோல் அன்று அவ்வழக்கம் இருந்திருக்க வில்லை. மாட்டிறைச்சி என்பது கடைகளில் விற்பதென்பது சில பத்தாண்டுகளாகத்தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்னர் மாடு தலித் கிராமங்களிலேயே அறுக்கப்படும். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மாடு அறுப்பதில் சிறந்து விளங்கினர். எடை போட்டு விற்பனை செய்வதற்குப் பதில் கூறு போட்டு கொடுக்கப்படும்.

மாடு அறுக்கும் பொழுது தலித் குழந்தைகள் இரண்டு காரணங்களுக்காக குதூகலமடைவர். ஒன்று, ருசியோடு வறட்டித் தரப்படும் மாட்டின் ரத்தம், இரண்டாவது மாட்டிலிருந்து எடுக்கப்படும் ஆனால் உண்ணப்படாத ஊத்தாம்பட்டி என்றழைக்கப்படும் ஒருவகைக் குடல். இவை இரண்டிற்காகவும் மாடு அறுக்கப்படும்பொழுது அதனைச் சுற்றி குழந்தைகள் உற்சாகத்தோடு அமர்ந்து கொள்வர். முதலில், ரத்தம் வறட்டி கிராமங்களிலுள்ள குழந்தைகளுக்குப் பாகுபாடின்றி வழங்கப்படும். பின்னர் மாடு அறுக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் ஊத்தாம்பட்டியில் இருந்து உருவாக்கப்படும் இந்த இசைக் கருவியின் பெயர் பறை அல்ல, அது கொட்டு என்றே அழைக்கப்படும். தலித் பெண்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு மாட்டிறைச்சி நல்ல ருசியான உணவு.

ஆரம்ப காலங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சியினை ரூ.5க்கு விற்று வந்தனர். 1990களிலும்கூட ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூ.10, ரூ.15 என்ற விலைகளில் விற்றுக் கொண்டிருந்தது. (இன்று மாட்டிறைச்சி கிலோ ரூ.150, ஆட்டிறைச்சியின் விலையோ ஒரு கிலோ ரூ. 350). இந்தக் காலங்களில் தலித்தல்லாத பிற சாதியினரும் மாட்டிறைச்சியினை உண்ணத் தொடங்கினர். இதில் இரண்டு காரணிகள் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. ஒன்று ருசி, மற்றொன்று விலை அபரிதமான சத்துக்கள். மாட்டிறைச்சியின் ருசியை தலித்தல்லாதோருக்குக் கற்றுக் கொடுத்தது உணவகங்களே என்று கூறலாம்.

ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக இருக்கிற பொழுது குறைந்த விலையில் அதுவும் ருசியான மாட்டிறைச்சி கிடைக்கிற பொழுது ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா என்ன? எனவே, மாட்டிறைச்சியை தலித்தல்லாதோர் நாடத்தொடங்கினர். ஆரம்ப காலங்களில் ரகசியமாகவே உண்டு வந்தனர். தலித்தல்லாதோர் ரகசியமாக மாட்டுக்கறி உண்ணுவதை நன்கு அறிந்திருந்த தலித்துகள் அதனை தங்களுக்குள் கிண்டல் செய்வதும் உண்டு. எத்தனை நாட்கள்தான் ரகசியமாக மாட்டுக்கறியை உண்பது? இன்று அவர்கள் வெளிப்படையாகவே மாடுகளை அறுக்கின்றனர் அதுவும் சாலைகளின் ஓரத்தில்! விற்பனைக்காகவும் கடையை விரித்திருக்கிறார்கள்! இன்று மாடு அறுத்தல், விற்பனை செய்தல் என அனைத்துப் பணிகளும் தலித்தல்லாதோரால் மேற்கொள்ளப்படுகிறது. மாநகரங்கள் தொடங்கி பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளிலும் வெளிப்படையாக மாட்டுக்கறி உண்ணும் வழமை வேரூன்றிக் கொண்டிருக்கிறது.

கடந்த காலங்களைப் போல் இன்றும் பசுமாடு இந்துத்துவ வளர்ச்சிக்கானப் பண்பாட்டு அரசியல் குறியீடாகப் பயன்படுத்தப்படுகின்றது. புனிதமான பசுவதையைத் தடுக்கின்றோம் என்ற பெயரில் தலித்வதையை அவ்வமைப்புகள் விளைவித்துக் கொண்டிருக்கின்றன. மிகச் சமீபத்தில், இறந்த மாட்டின் தோலினை அறுத்தெடுத்து தோல் வியாபாரத்திற்குச் சென்று கொண்டிருந்த தலித்துகள், இந்துக்களால் அடித்தே கொல்லப்பட்டது தலித்வதைக்கான சிறந்த உதராணம் ஆகும். பசு புனிதம் என்ற இந்துத்துவத்தின் கருத்தாக்கத்திற்கும் அது விளைவிக்கின்ற வன்முறைக்கும் எதிரான போராட் டம் அறிஞர்களாலும் இயக்கங்களாலும் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது.

அன்பு பொன்னோவியம் எழுதிய, உணவில் ஒளிந்திருக்கும் சாதி என்ற கட்டுரையிலும், டி.என்.ஜா பசுவின் புனிதம் என்ற நூலிலும் யாகம் என்ற பெயரில் பிராமணர்கள் மாட்டுக்கறி உண்ட வரலாற்றினை தோலுரித்துக் காட்டியிருக்கின்றனர். பசுவை புனிதமாக போற்றுகின்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிரான சரியான பண்பாட்டு அரசியல் மாட்டுக்கறி விருந்து படைப்பதுதான். இதனால் இதுகாறும் ஏதாவது சில காரணங்களினால் மாட்டுக்கறி உணவினை தவிர்த்து வந்தவர்கள்கூட இந்துத்துவத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினால் மாட்டுக்கறி உண்ணத் தொடங்கியிருக்கின்றனர்.

நன்றி : கோ.ரகுபதி. நன்றி: கீற்று.

No comments: