Feb 20, 2011

அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வாள்!!


1960-களின் தொடக்கத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய கண்ணபிரான், ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தில் (APCLC) 15 ஆண்டுகளாகத் தலைவராகவும், பத்தாண்டுகளாகக் குடியுரிமைக்கான மக்கள் கழகத்தின் (PUCL) அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் தற்போது அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார். 1975-இல் இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டுப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில், கொடிய “மிசா” சட்டத்தை எதிர்த்து கண்ணபிரான் நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்தினார்.

அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் நடந்த போலீசின் மோதல் படுகொலைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தார்குண்டே கமிசனில் கண்ணபிரான் முன்னணிப் பாத்திரமாற்றினார்.போலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் “வன்முறை” என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான ‘நடுநிலைக்கு’ மாறாக, அரசு பயங்கரவாதத்தை முதன்மை எதிரியாக அவர் உணர்த்தினார்.

“மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமத்துவத்துக்காகவும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு பலதரப்பட்ட இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமேயன்றி, இதைச் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து, போலீசுக்கும் உளவுத்துறைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கி வன்முறைகளில் ஈடுபட அரசு அனுமதிப்பதும், கிரிமினல் சட்டங்களை ஏவி அரசியல் இயக்கங்களை ஒடுக்குவதும் நியாயமென்றால், நமது ஜனநாயகத்தின் பொருள்தான் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து மீட்டுள்ளார். ஈழ அகதிகள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவில் சிறையில் வதைக்கப்பட்டபோதும், வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டிப் பழங்குடியின மக்கள் “தடா” சட்டத்தில் வதைக்கப்பட்ட போதும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவர் நீதிமன்றங்களில் போலீசின் பயங்கரத்துக்கு எதிராகப் பல வழக்குகளில் வாதிட்டார்.

குஜராத்தில் நடந்த இந்துவெறி பாசிச பயங்கரவாதப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிலும் இடம் பெற்றார். சர்வதேச கடல் பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகை அடாவடியாகக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த போது, பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு அந்த வழக்கில் வெற்றி பெற்றார். தனது வாழ்நாள் முழுவதும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்ட உன்னதப் போராளி அவர். கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81-வது வயதில் காலமாகிவிட்டார்.

நன்றி: வினவு.

No comments: