சென்னை, பிப். 6: இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக விடுதலைப்புலிகள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசு அறிவித்தது. இதன்பிறகு அவரது தாயார் பார்வதி அம்மாள், தந்தை வேலுப்பிள்ளை ஆகியோரை சிங்கள ராணுவம் கைது செய்தது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி வேலுப்பிள்ளை காலமானார். கணவரின் திடீர் மரணம் பிரபாகரன் இறந்து விட்டதாக வெளியான அதிர்ச்சி செய்திகள் ஆகியவை பார்வதி அம்மாளை கடுமையாக பாதித்தது. அவரது உடல் நிலை மேலும் மோசமானது. சிகிச்சைக்காக அவர் மலேசியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் சென்னையில் தங்கி இருந்து அவர் சிகிச்சை பெற விரும்பினார்.
இதற்காக முறையான விசா பெற்று சிகிச்சை பெறுவதற்காக அவர் விமானத்தில் சென்னை வந்தார். ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு சம்மதித்தது. ஆனால் அவர் மறுத்துவிட்டார். மலேசியாவில் இருந்து கடந்த மே மாதம் இலங்கை திரும்பிய பார்வதி அம்மாள் வல் வெட்டி துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 10 மாதங்களாக டாக்டர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. சுயநினைவை அவர் இழந்துவிட்டார். தன்னை பார்க்க வருபவர்கள் யார் என்பதை கூட அவரால் அடையாளம் காண முடியவில்லை. கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு குழாய் மூலமாக திரவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. பார்வதி அம்மாளின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள். இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் உடனிருந்து கவனித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment