ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.
* பள்ளிப் பிள்ளைகளும், நிர்வாகிகளும் நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். 100 கிராம் பாதாம் பருப்பில் 490 மில்லி கிராம் பாஸ்பரஸ், தாது உப்பு இருக்கிறது. குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.
* அதேபோல இருபது கிராம் அக்ரூட் பருப்புகளுடன் பத்து கிராம் உலர்ந்த திராட்சைப் பழத்தை தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தாலும் பலமில்லாத மூளை வலுப்பெற்று நினைவாற்றல் அதிகரிக்கும். செலவில்லாமல் சாப்பிட 50 கிராம் வேர்க்கடலை போதும்.
* ஞாபக சக்தியை அதிகரிக்கும் முதல் பழம் ஆப்பிள். இரண்டாவதாக பேரீச்சை, திராட்சை, மாதுளை, ஆரஞ்சு முதலியன.
* சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.
* கோதுமை, சோளம், பார்லி, காராமணி, பாசிப்பருப்பு, கேரட், தண்டுக்கீரை, பீட்ரூட், முருங்கைக்காய், சோயாபீன்ஸ், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, புதினா முதலியவற்றில் பாஸ்பரஸ் உப்பு அதிக அளவில் உள்ளது. இவை தவிர பால், தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும்.
மனிதர்களுக்கு நினைவாற்றல் குறைந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம், கவலைகள்தான். இரத்த ஓட்டக் குறைவும் நோயால் நேரடியாகவோ மறைமுகமாகவோ மூளைக்குச் சரியானபடி இரத்தம் கிடைக்காததும் காரணங்களாகும். மூளை சோர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment