Jan 23, 2011

மானம் கெட்ட தமிழக அரசு: தொடர்கதையாகும் மீனவர்கள் சாவு!!


கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படையினர் தாக்கி கொல்லும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் பாண்டி சமீபத்தில் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில் சிங்கள கடற்படை கொடூர தாக்குதலுக்கு வேதாரண்யம் மீனவர் ஒருவர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன். இவருக்கு சொந்தமான விசைபடகில் புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன் (வயது 45), ஜெயக்குமார் (28), அவரது தம்பி செந்தில் (26) ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று காலையில் கடலுக்கு சென்ற இந்த மீனவர்கள் 3 பேரும் கோடியக்கரை பகுதியில் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

இரவு சுமார் 10 மணியளவில் இவர்கள் படகை நோக்கி சிங்கள கடற்படையினரின் படகு ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. நேராக வந்த அந்த படகு தமிழக மீனவர்கள் படகு மீது மோதி நின்றது. அந்த படகில் 10-க்கும் மேற்பட்ட சிங்கள கடற்படையினர் துப்பாக்கிகளுடன் இருந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை மிரட்டினர். பிறகு 3 தமிழக மீனவர்களையும் கடலில் குதிக்கும்படி கூறினார்கள். உயிருக்கு பயந்து ராஜேந்திரனும், செந்திலும் கடலில் குதித்து விட்டனர். ஜெயக்குமார் கை ஊனமுற்றவர். சரியாக நீச்சலும் தெரியாது. ஜெயக்குமார் கடலில் குதிக்காமல் தனது படகிலேயே பயத்தில் நடுங்கிக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.

உடனே ஒரு சிங்கள கடற்படை வீரர் தமிழக மீனவர் படகில் ஏறினார். அந்த படகில் இருந்த கயிற்றை எடுத்து ஜெயக்குமார் கழுத்தை இறுக்கினார். பிறகு ஜெயக்குமாரை கடலில் தள்ளினார். கடலில் தத்தளித்த அவரை கயிற்றை பிடித்து இழுத்து இறுக்கி துடிதுடிக்க கொடூரமாக கொன்றார். இந்த செயலையை பார்த்த மற்ற 2 மீனவர்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர். இந்த கொடூர செயலை அரங்கேற்றிவிட்டு சிங்கள கடற்படை படகு அங்கிருந்து விரைந்து சென்று மறைந்தது. உடனே ராஜேந்திரனும், செந்திலும் சுதாரித்துக் கொண்டு ஜெயக்குமார் உடலை தூக்கி தங்கள் படகில் போட்டனர்.

தனது கண்முன்பே அண்ணன் ஜெயக்குமார் கொல்லப்பட்டதை நினைத்து செந்தில் கதறினார். பிறகு அவர்கள் கரை திரும்பினர். இன்று அதிகாலை 5 மணியளவில் இவர்கள் படகு புஷ்பவனத்தில் கரை சேர்ந்தது. இதற்கிடையில் புஷ்பவனம் கிராமத்தில் இந்த தகவல் பரவி விட்டதால் கடற்கரையில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு நின்றனர்.

ஜெயக்குமாரின் பிணத்தை பார்த்து அவரது மனைவி முருகேஸ்வரி கதறி அழுதார். மற்ற மீனவர்கள் சிங்கள கடற்படையினரை கண்டித்து கோஷம் போட்டனர். இதனால் கடற்கரையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கடலோர காவல்படையினர், கியூ பிராஞ்ச் போலீசாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளும் அங்கு விரைந்து உள்ளனர். உயிர் தப்பிய மீனவர்கள் ராஜேந்திரன், செந்தில் ஆகியோர் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மீனவர் ஜெயக்குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புஷ்பவனம் மீனவர்கள் 300 பேர் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினார்கள்.

2 comments:

Unknown said...

வருத்தமான நிகழ்வு. கடந்த 10 நாளில் நிகழும் 2 வது மரணம் இது.

Anonymous said...

மீனவ சகோதரர்களின் மரணம் தொடர்கதையாகவே உள்ளது. அரசில் இருப்பவர்கள் அறிக்கைகள் மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதாய் போக்குக்காட்டி தமது நாற்காலிகளைத் தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இதற்கு ஒரு சிறந்த முடிவு அந்த அப்பாவி மீனவ சகோதரர்ளின் மரணஙகளை நிறுத்த ஒரே வழி அவர்ளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ஆயுதங்கள் வழங்கப்படுவதே. அரசியல் வியாதிகளை நம்பி பயனில்லை.