Dec 31, 2010

புத்தாண்டை வரவேற்கும் உலகம்.

புத்தாண்டை வர்ணமயமான வாண வேடிக்கைகளுடனும் மகிழ்ச்சி ஆரவாரங்களுடனும் வரவேற்பதற்காக இலட்சக் கணக்கான மக்கள் சிட்னி "ஹாபர் பிரிட்ஜ்' ஜில் கூடியுள்ளனர்.அத்துடன் கண்களைக் கொள்ளை கொள்ளும் வர்ணமயமான அலங்காரங்களுடன் புத்தாண்டை வரவேற்பதில் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற அதீத ஆர்வத்துடன் அவுஸ்திரேலியர்கள் ஹாபர் பிரிட்ஜ்'ஜை அலங்கரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு மலரும் நேரத்தில் குறைந்தது 15 இலட்சம் பேர் இங்கு குழுமியிருப்பார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஆசியாவிலும் களைகட்டியுள்ள நிலையில் வியட்நாம் முதல் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.அமெரிக்கா கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கின்ற நிலையிலும் நியூயோர்க்கின் ரைம்ஸ் சதுக்கத்தில் நள்ளிரவு வேளையில் சுமார் 10இலட்சம் பேர் கூடுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

வியட்நாமியர்களின் லுனார் வருடப் பிறப்பையே வழமையாகக் கொண்டாடி வருகின்ற போதும் மேற்குலக கலாசாரத்தின் செல்வாக்கு இங்கு அதிகரித்துள்ளதன் காரணமாக இம்முறை புதுவருடக் கொண்டாட்டங்கள் களை கட்டுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நெருக்கடி நிலையை மறந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஐரோப்பியர்களும் மூழ்கியுள்ள நிலையில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் புத்தாண்டை மிகக் கோலாகலமாக வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: