Aug 21, 2010

இந்தியாவின் பொருளாதார, ராணுவ பலத்தைக் கண்டு சீனா கவலை: பென்டகன் அறிக்கை.

டெல்லி,ஆக21:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ராணுவ பலத்தைக் கண்டு சீனா கவலையடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பென்டகன் தனது நாட்டு அரசிடம் சமர்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவி்க்கப் பட்டுள்ளது. ஜப்பானை பின் தள்ளிவிட்டு உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக சீனா வளர்ந்துவிட்டாலும் இந்தியா குறித்து அந் நாடு பெரும் கவலையில் உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும்,ராணுவரீதியில் இந்தியா அடைந்து வரும் பலமும், சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கு பிற நாடுகள் அளிக்கும் முக்கியத்துவமும் சீனாவை கவலை கொள்ளச் செய்துள்ளன.இதனால் இந்திய எல்லையில் தனது படைகளை சீனா அதிகரித்துள்ளது. மேலும் எல்லைப் பகுதியில் மிக நவீனமான CCS-5 ரக அணு ஆயுத ஏவுகணைகளையும் நிலை நிறுத்தி வருகிறது.

மேலும் எல்லையில் பாராசூட் படையினரின் எண்ணிக்கையையும் போர் விமானங்களின் எண்ணிக்கையயும் அதிகரித்துள்ளது சீனா. மத்திய சீனாவின் குயின்காய் மாகாணத்தில் டெலின்ஹா, டா குவைடாம் ஆகிய இடங்களில் 60 ஏவுகணை ஏவுதளங்களை சீனா அமைத்திள்ளது. இங்கிருந்து வட இந்தியாவை குறி வைப்பது எளிது என்பதால் இந்த ஏவுதங்களை சீனா கட்டியுள்ளதை சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்கின்றன.

மேலும் டிரக்குகளில் ஏந்திச் சென்று ஏவக்கூடிய DF-31A ஏவுகணைகளையும் (இவை 11,200 கிமீ தூரம் பாயக் கூடியவை), நீர்மூழ்கிகள் மூலம் ஏவப்படும் JL-2 ரக ஏவுகணைகளையும் (இவை 7,200 கிமீ தூரம் பாயும்) சீனா அதிகவில் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா-சீனா இடையே 4,057 கி.மீ. தூர எல்லை உள்ளது. இதில் பல இடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை நிலவுகிறது.

இதில் கிழக்கு லடாக்கில் உள்ள டிரிக் ஹைட்ஸ், பான்கோங் சோ ஏரி, சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் ஆகிய இடங்களில் அடிக்கடி இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் அடிக்கடி ஊடுருவதும் நடந்து வருகிறது. இதில் அருணாசலப் பிரதேசத்தை தனது திபெத் பகுதியின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதனால் அருணாசலப் பிரதேசத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கி வழங்க இருந்த ரூ. 15,000 கோடி கடனை தர விடாமல் சீனா தடுத்தது. இதற்காக அந்த வங்கிக்கு சீனா கடும் நெருக்குதல் தந்தது.

அதே நேரத்தில் 1962ம் ஆண்டு சீனாவில் தோற்றபோது இருந்த நிலையில் இந்திய ராணுவம் இப்போது இல்லை. இந்தியாவும் தனது படைகளை பலமடங்கு அதிகரித்துவிட்டதோடு, ஆயுதங்களையும் குவித்துவிட்டது.படையினருக்கு மிக நவீன ஆயுதங்கள், மிகத் தரமான பயிற்சிகள் தரப்பட்டு இந்திய ராணுவம் உலகின் மிகச் சிறந்த படைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

தனது ஏவுகணைகளின் சக்தியையும் பயணிக்கும் தூரத்தையும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தியா, மிக நவீனான சுகோய் 30 எம்கேஐ ரக போர் விமானங்களை சீனாவை ஒட்டிய பகுதிகளி்ல் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளது.இதற்காக சீன எல்லையில் பல புதிய போர் விமானத் தளங்களை இந்தியா கட்டியுள்ளது.தொடர்ந்து அவற்றின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: