Aug 3, 2010

8 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்: இந்தியா, சீனாவுக்கு இனி வெளிப்பணி ஒப்படைப்பு இல்லை: ஒபாமா.

வாஷிங்டன், ஆக.3: அமெரிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் புதிய பொருளாதார கொள்கையை செயல்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார். எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீனாவுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு பணிகள் இனி அளிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். அட்லாண்டா நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த மாகாணத்தில் இன்னும் சில மாதங்களில் மிகவும் முக்கியமான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் என கருதப்படுகிறது. இந்த சூழலில் மக்களின் நம்பிக்கையைப் பெரும் வகையில் அவர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டார்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் இருந்தது. இதனால் அரசின் வரி வருவாயில் பற்றாக்குறை நிலவியது. இந்த காலகட்டத்தில் வேலை இழந்தோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். பொருளாதார தேக்க நிலை காரணமாக 80 லட்சம் பேர் வேலையிழந்தனர். 2009-ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்றபோது 7.5 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்தனர். பின்னர் அடுத்த ஒரு மாதத்தில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை 6 லட்சமாகும்.

வரிச் சலுகை அளிப்பதை விட புதிய கண்டுபிடிப்புகள், சுற்றுச் சூழலை பாதிக்காத சுத்தமான எரிசக்தி, கல்வி ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலான பலன்கள் கிடைக்கும். மேலும் சிறப்பு வட்டிச் சலுகை அளிப்பதை விட பங்குச் சந்தை முதல் வெள்ளை மாளிகை வரை அனைத்துக்கும் புதிய கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கடந்த பத்து ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகள் மாற சிலகாலம் பிடிக்கும்.

பல லட்சம் பேர் வேலையிழக்கக் காரணமான கொள்கைக்கு மாற்றாக புதிய வேலை வாய்ப்பை தனியார் துறைகளில் உருவாக்க அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கவேண்டும். அப்போதுதான் புதிய கொள்கைகளை மிகவும் உறுதியுடன் செயல்படுத்த முடியும்.

எதிர்வரும் தேர்தலில் மக்களுக்கு உள்ள சந்தர்ப்பங்கள் இரண்டுதான். அதாவது பொருளாதார சீர்திருத்தமும், வேலை வாய்ப்பும் தேவையா? அல்லது பின்னோக்கி சென்று பழைய பொருளாதார கொள்கையில் சிக்குவதா? என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய கொள்கைகள் அரசிடம் உள்ளது. இதற்கு மக்கள் ஆதரவு தேவை. ஜனநாயகக் கட்சியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது ஆதரவை வெளிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிப்பதைவிட அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். அதற்கேற்ப அவற்றுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியா, சீனாவுக்கு வெளிப்பணி ஒப்படைக்கும் நிறுவனங்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்றார்.

எதிர்க்கட்சியினர் அடுத்த தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுகின்றனர். ஆனால் அரசோ அடுத்த தலைமுறைக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்காகத்தான் கடந்த 20 மாதங்களாக புதிய கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தி வருவதாக ஒபாமா கூறினார்.சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களைத்தான் அமெரிக்கா வரவேற்கிறது. அதற்காக பிற நாடுகளில் உள்ளதைப் போன்று சூரிய பலகை மின்சாரம், காற்றாலை மின்சாரம், பயோடீசல் என அனைத்தும் சேர்த்து உருவாக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

இதற்காக சீனா, ஜெர்மனி, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவில் தொழில் தொடங்க வேண்டும் என்பதல்ல. எதிர்காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள்தான் இங்கு தொழில் தொடங்கி நடத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். இதற்காக இதுவரை செய்துள்ள முதலீடுகள் மூலம் 2012-ம் ஆண்டிற்குள் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார் ஒபாமா.

No comments: