Jul 23, 2010

ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கைது - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்.

கோவையில் 2006 ஆம் ஆண்டில் உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாத்துரை ஆகியோர்கள் போலியான வெடிகுண்டு நாடகம் நடத்தி அப்பாவி முஸ்லிம்களை கைது செய்ததாக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு துறை [CBCID-SIT] அதிகாரிகள் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்தனர். இவ்வறிக்கை சமர்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கழிந்த பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையினையும் அரசு மேற்கொள்ளவில்லை. தெளிவாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

எனவே பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தியுள்ளோம். பல்வேறு இடங்களில் காவல்துறையினர் அனுமதி மறுத்து ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளது. இன்று தலைமை செயலகத்தை நோக்கி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டது. நாங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தக்கூட காவல்துறை அனுமதி மறுத்துள்ளது வேதனைக்குறியது. மேலும் பேரணியில் கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இது போன்ற ஜனநாயகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.கைது செய்யபட்டவர்கள் அனைவரையும் காவல்துறை உடனே விடுவிக்க வேண்டும்.
கோரிக்கைகள்:-

1. வெடிகுண்டு நாடகம் நடத்தி 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வை அலங்கோலப்படுத்திய, உளவுத்துறை அதிகாரி ரத்தின சபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகள், பால்ராஜ், திருமேனி, கோபாலகிருஷ்ணன், அண்ணாத்துரை ஆகியோர்களை உடனே பணிநீக்கம் செய்து அவர்கள் மேல் குற்ற வழக்கு பதிவு செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்.

2. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த இருகோரிக்கைகளையும் இப்போராட்டத்தின் வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தவும் செய்கின்றோம்.

No comments: