Apr 15, 2010

ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம் : ஐரோப்பாவில் விமானங்கள் ரத்து.


ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
விமான எந்திரங்களில் கோளாறு ஏற்படும் என்பதால் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் வான்வெளியில் எந்த ஒரு விமானமும் சில மணி நேரங்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கணிக்க‌க் கூடிய நிலையில் அங்கு நிலவரம் இல்லை என்பதால் வான்வெளி எப்போது விமானப் போக்குவரத்திற்கு தயாராகும் என்பது பற்றி சரியான தகவல்கள் தற்போது வரை இல்லை. இந்தப் புகை நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் விமானப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகியுள்ளது. இந்த எரிமலை சாம்பற்புகையில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமான எந்திரம் நடுவானில் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.போக்குவரத்து நிறுத்தப்பட்ட விமான நிலையங்கள். ஆபர்தீன், எடின்பர்க், கிளாஸ்கோ விமான நிலையங்கள் மூடப்பட்டது.லிவர்பூல் ஜான் லென்னான் விமான நிலையம், மான்செஸ்டர் மற்றும் நியூகாசில் விமான நிலையங்கள். பர்மிங்காம் விமான நிலையத்தில் கணிக்க முடியாத அளவுக்கு விமானங்கள் தாமதம். தவிரவும் ஈஸ்ட் மிட்லேன்ட், லீட்ஸ் பிராட்ஃபோர்ட், கார்டிப், பிரிஸ்டல் விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள காட்விக், ஹீத்ரூ, மற்றும் சிட்டி விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பத்தாயிரக்கணக்கான பயணிகள் அவதி.பிரிட்டனின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சாம்பற்புகை 55,000 அடி உயரத்திற்கு சென்றுள்ளது இது வடக்கு பிரிட்டன், மற்றும் ஸ்காட்லாந்து ஊடாகக் கடந்து செல்லும் என்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது. ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: