அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமுல்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்த முத்துராமன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகங்களில் இந்து கோவில்கள் இருக்கின்றன. இந்த கோவில்கள் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்து கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரை புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும்." என்று சுறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர். பிறகு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், "அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்." என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment