Mar 12, 2010

ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா.

சென்னை: சென்னை நகர ரேஷன் கடைகளில் சோதனை முறை நடவடிக்கையாக அபிராமபுரம், ஓட்டேரி, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் மாதம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. ரேஷன் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டதன் மூலம் ஊழியர்கள்களின் நடவடிக்கைகள், பொது மக்களிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை, வெளியாட்கள் யாரும் கடைக்கு வருகிறார்களா? என்பதை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தவாறு கண்காணித்தனர்.

இதன் பயனாக முறைகேடு, கடத்தல், ரவுடிகள் மாமூல் கேட்பது போன்ற சமூக விரோத செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன. அதிகாரிகள் தங்களை எந்நேரமும் கண்காணிக்க கூடும் என்பதால் கேமரா பொறுத்தப்பட்ட கடை ஊழியர்கள் பொது மக்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்து கொள்கின்றனர் பொது மக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. கண்காணிப்பு கேமரா பொருத்த ஒவ்வொரு கடைக் கும் ரூ. 30 ஆயிரம் செலவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கு கிடைத்த அமோக ஆதரவை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் 20 ரேஷன் கடைகளில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. லாயிட்ஸ் காலனி, சைதாப்பேட்டை, எழும்பூர், கொளத்தூர், புளியந்தோப்பு, பட்டாபிராம், கத்திவாக்கம், தங்கசாலை போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு கடைக்கும் ரூ. 14 ஆயிரம் செலவில் கேமரா அமைக்கப்பட்டுள்ளது.கண்காணிப்பு கேமராக் களின் செயல்பாடுகளை www.remotedatacentre.com/camera.html மற்றும் www.chennaiunion.coop ஆகிய வலை தளங்களில் பொது மக்கள் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எல்லா கடைகளிலும் எல்லா ரேஷன் கடைகளிலும் இதுபோன்று கேமரா பொருத்தும் திட்டம் விரிவு படுத்தப்படும் என்று தெரிகிறது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, ஈரோடு மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

No comments: