Jan 10, 2010

வேலையில்லா திண்டாட்டத்தில் அலறும் அமெரிக்கா


உலக நிதி நெருக்கடி காரணமாக உலகமெங்கும் பல மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் கூட இந்த நிதி நெருக்கடியில் நொந்து போயின. இதில் என்னவோ அதிகமாக அடிவாங்கியது அமெரிக்காதான்.

2007ல் ஆரம்பித்த இந்த நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் இதுவரை 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இதில் 4.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிதிநெருக்கடி உச்சம் கொடுத்த 2009ம் ஆண்டில் இழக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி ஓய்ந்துவிட்டது எல்லாம் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்புகின்றது என்று ஒபாமா ஒப்பாரி வைக்கும் நேரத்தில் கடந்த டிசம்பர் மாதக்காலப்பகுதியில் மீண்டும் 85,000 வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன. இதேபோல நவம்பர் மாதக்காலப்பகுதியில் 11,000 வேலைகள் இழக்கப்படலாம் என்று அமெரிக்க அலுவலர்கள் எதிர்பார்த்தாலும் எதிர் பார்த்ததைவிட 4000 வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இழக்கப்பட்டுள்ளன. எது என்னவானாலும் வேலைவாய்ப்பில்லா வீதத்தை 10% பேணுவதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. இது இந்த வருடம் 11 வீதமாக அதிகரிக்கும் என்றும் இது உலக யுத்தம் II இன் பின்னர் ஏற்பட்ட அமெரிக்காவின் மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாடமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்கைப் பார்க்கும் போது எமக்கே பீதி ஏற்படும்போது அமெரிக்கா பீதியடைவதில் வியப்பேதும் இல்லை. கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவில் இப்படியான வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் நிலவியதில்லையாம். ஒபாமாவின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சோதனையாகவும், தலையிடியாகவும் இந்த வேலையில்லாத் திண்டாட்டம் திகழ்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா தனது புதிய பொருளாதார மீட்சி திட்டத்தை அறிவித்தார். அதன்படி சிறிய வியாபாரங்களை ஊக்குவிக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.



ஒபாமா அமெரிக்க வங்கிகளை சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களுக்கு பணம் கொடுத்து உதவுமாறு வேண்டிக்கொண்டுள்ளார். அமெரிக்க வங்கிகளுக்கு ஒபாமா நிர்வாகம் சுமார் $700 பில்லயன் அமெரிக்க டாலர்களை உதவித் தொகையாக வழங்கியது. இதனால் சதாரண மக்கள் கடும் கடுப்பாகவுள்ளனர். ஆயினும் ஒபாமா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் 1930ன் பின்னர் அமெரிக்க எதிர்கொள்ளும் இந்த மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்த கடன் உதவி அவசியமாகின்றது என்று அறிவித்தார்.முன்பு தான் செய்த உதவிக்கு பரோபகாரம் தேடும் நடவடிக்கையாகவே ஒபாமா இந்த வேண்டுகோளை முன் வைத்துள்ளார் என எண்ணலாம்.

சில அமெரிக்க வங்கிகள் அரசு கொடுத்த கடன்களை நன்றியுடன் திருப்பி வழங்கிய நிகழ்வுகளும் நடந்தேறத் தொடங்கிவிட்டன. உதாரணமாக அமெரிக்க அரசு கொடுத்த 20பில்லயன் அமெரிக்க டாலர் கடன் தொகையை சிட்டி குரூப் எதிர்பார்த்த காலத்தை விட குறுகிய காலத்தில் மீள அரசிற்கு வழங்கியுள்ளது. இது வங்கித்துறை நிதி நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வருவதைக் காட்டுவதாக இருப்பினும், வங்கிகள் அரச தலையீட்டை அவ்வளவாக விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் என்று கேட்டால் எனக்கும் சத்தியமாக பதில் தெரியாது. ஆயினும் 2012 வரை கூட இதன் தாக்கம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பல நிறுவனங்கள் புதிதாக வேலையாட்களைச் சேர்க்க கூடிய கொள்ளளவு இருந்தாலும் பயம் காரணமாக சேர்ப்பதில்லை.

இது இப்படியென்றால் நம்மூரில் உலக நிதி நெருக்கடியை காட்டி கொள்ளயடிக்கும் நிறுவனங்கள் அதிகம். மிகுந்த இலாபத்தில் இயங்கினாலும் உலக நிதி நெருக்கடியைக்காட்டி ஊழியரிடம் அளவுக்கு அதிகமாக வேலை வாங்குதல் மற்றும் சம்பள உயர்வு வழங்காமை போன்ற காரியங்களிலும் ஈடுபடுகின்றன. மக்கள் நலம் உள்ள அரசு தலையிட்டால் அன்றி இப்பிரைச்சனைகள் தீர வழியிருப்பதாகத் தெரியவில்லை.

No comments: