Jul 17, 2010

இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி: இந்தியா மீது குரேஷி கடும் தாக்கு.


இந்தியா முழு அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும், குறிப்பிட்ட சில விடயங்களை மட்டுமே மீண்டும் மீண்டும் பேசுவதாகவும் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி குற்றம்சாற்றியுள்ளார். இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷி ஆகியோர் இடையே நேற்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, இந்திய உள்துறை செயலர் ஜி.கே.பிள்ளையை, மும்பை தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஷ் சயீத்துடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளாகவே குரேஷி மீண்டும் இந்தியாவையும், தம்முடன் பேச்சு நடத்திய எஸ்.எம்.கிருஷ்ணாவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதுவும் கிருஷ்ணா தமது 3 நாள் பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார்.
அதில், கிருஷ்ணாவுடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட்ட குரேஷி, இந்தியா குறிப்பிட்ட சில விடயங்களை மட்டுமே தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், பாகிஸ்தான் தரப்பு நியாயங்களையும் இந்தியா புரிந்துகொள்ளாதவரை இருநாடுகளி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் காட்டமாக கூறினார்.

மேலும் முழு அளவிலான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இல்லை என்றும், பாகிஸ்தான் தரப்பில் எழுப்பப்படும் பிரச்னைகளை விவாதிக்க இந்தியா தயாராக இல்லை என்றும் அவர் கூறினார். உதாரணமாக சியாச்சினில் அல்லாமல் சர் கிரீக்கில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என இந்தியா கூறுமானால் பேச்சுவார்த்தையில் மேற்கொண்டு முன்னேற்றம் இருக்காது. இதேப்போன்றுதான் பாதுகாப்பு மற்றும் காஷ்மீர் போன்ற முக்கிய பிரச்னைகளை விவாதிக்காமல் ஒதுக்கிவிடமுடியாது.

எங்கள் தரப்பு பேச்சுவார்த்தையில் காஷ்மீரும் ஒரு அங்கம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். காஷ்மீர் நிலைமை குறித்து பாகிஸ்தான் மக்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பது சாத்தியமானதல்ல. காஷ்மீரில் இந்தியா மீண்டும் துருப்புக்களை நிறுத்தி, ஊரடங்கையும் அமல்படுத்தினால் பாகிஸ்தானால் எவ்வாறு மவுனமாக இருக்க முடியும்? பாகிஸ்தானுக்கென்று சில நலன்கள் உள்ளன. இந்தியா அதனை புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச பாகிஸ்தான் தயாராக உள்ளது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக உள்ளதாக தொடக்கத்திலிருந்தே பாகிஸ்தான் கூறி வருகிறது.ஆனால் இந்தியா தரப்பில் பேசுபவர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் இல்லாமல் உள்ளனர்.பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரமோ, மேலிட உத்தவோ இல்லாமல் இருந்தால், இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வரக்கூடாது.

இப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கூட இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, என்னிடம் பேசிக்கொண்டிருக்கையிலேயே டெல்லியிலிருந்து அவருக்கு மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. அங்கிருந்து வந்த அயலுறவுக் கொள்கைக்கான வழிகாட்டுதலின்படி அவர் என்னுடன் பேச்சு நடத்தினார்.

ஆனால் பாகிஸ்தான் தரப்பில் நான் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறி சென்று, எந்த ஒரு தொலைபேசி அழைப்பிலும் பேசவில்லை.பாகிஸ்தான் தரப்பிலிருந்து எத்தகைய தடையும் இல்லை. எந்த பிரச்னை குறித்தும் பேச நான் தயாராகவே உள்ளேன்.அதே சமயம் நேற்றைய பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையான நிலையை ஏற்படுத்திவிட்டது என்று நான் கூறமாட்டேன் என குரேஷி மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியா புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணா, நேற்றைய பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், குரேஷி டெல்லி வரும்போது தொடர்ந்து பேசுவோம் என்றும் கூறினார்.கிருஷ்ணா இவ்வாறு கூறியபோதிலும், நேற்றையை பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்பதையே குரேஷியின் மேற்கூறிய பேட்டி உணர்த்துவதாக உள்ளது என்று அயலுறவுத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

No comments: