Jun 4, 2010

'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்': அருந்ததி ராய்.

மும்பை:'என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும், ஆயுதமேந்தி போராட்டம் நடத்திவரும் நக்ஸல்களை தொடர்ந்து ஆதரிப்பேன்' என்று புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக நீதி ஆதரவாளருமான அருந்ததி ராய் தெரிவித்தார். மும்பையில் புதன்கிழமை இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மக்களுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் அருந்ததி ராய் சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

வன்முறையை எப்போதும் ஆதரிக்க மாட்டேன். ஆனால் அரசியல் ரீதியாக நடத்தப்படும் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். நக்ஸல் இயக்கம் என்பது போராளி இயக்கம் அல்ல. பொதுமக்களுக்காக ஆயுதமேந்தி செயல்படும் இயக்கம். ஆயுதப் போராட்டம் என்பது காந்திய வழியில் நடத்தப்படும் ஒருவகை அறப்போராட்டம்தான். ஆனால் தற்போதைய நிலையில் இந்தப் போராட்டம் வெற்றிபெற வாய்ப்பில்லை.

நீர்,வனம்,கனிமங்கள் ஆகியவற்றை சுரண்டும் வியாபார, பணக்கார கும்பலை எதிர்த்து போராடும் பழங்குடி மலைவாழ் மக்களுக்கு ஆதரவாக நக்ஸல்கள் செயல்படுகின்றனர். இதை அரசுக்கு எதிரான போராட்டமாகக் கருதக்கூடாது. நக்ஸல்களில் 99 சதவீதம் பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பழங்குடியினரில் 99 சதவீதம் பேர் நக்ஸல்கள் அல்ல.இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments: