http://sinthikkavum.blogspot.com/ வாசகர்களுக்காக NDTV யின் வீடியோ இங்கே அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஆழ்வார்குறிச்சி உதவி ஆய்வாளர் வெற்றிவேல் சில மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். அவர் வெட்டுப் பட்டு நடு ரோட்டில் கிடந்தபோது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் , விளையாட்டு துறை அமைச்சர் மைதீன் கான் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜெயராமன் ஆகியோர் அந்த வழியே வந்தனர் . அவர்களைக் கண்டதும் கொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர் . வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த வெற்றிவேலை அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்ய வில்லை . அவர்கள் அனைவரும் இலவச ஆம்புலன்ஸ் 108 க்காக காத்துக் கொண்டு இருந்தனர் . சிறிது நேர தாமதத்திற்குப் பின் அமைச்சர் மைதீன் கானின் பாதுகாப்பு வேனில் ஏற்றி சென்றனர் . வெற்றிவேல் தண்ணீருக்காக பரிதவித்த போது தண்ணீர் கொடுத்த ஒருவர் வெற்றிவேலின் ரத்தம் எங்கே தன் மீது தெறித்து விடுமோ என்ற அச்சத்தில் வெற்றிவேலுக்கு தண்ணீர் கொடுத்தது மனிதாபிமானம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை வரவழைத்தது . வெற்றிவேலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அமைச்சர்களும், அதிகாரிகளும், போலீஸாரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேல் ஒரு கால் துண்டிக்கப் பட்ட நிலையில் சாலையில் புரண்டு வரும் காட்சியும், அமைச்சர்கள் பன்னீர் செல்வம், மைதீன்கான் ஆகியோர் சற்று தொலைவில் நின்று கொண்டிருக்கும் வீடியோ காட்சியும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெற்றிவேலைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனினும் இது குறித்து தெரிவித்த திருநெல்வேலி ஆட்சியர் ஜெயராமன் சில வெடிக்காத குண்டுகள் அவர் அருகே கிடந்ததால் உடனே எங்களால் அவர் அருகே செல்ல முடிய வில்லை என்றும் இருப்பினும் 10 நிமிடமே ஆம்புலன்சுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment