Jan 9, 2010

சரணடந்த புலிகளை கொல்லும் வீடியோக்காட்சிகள் உண்மையானவை


கொழும்பு:சரணடைந்த தமீழீழ விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் மொபைல் படமாக்கப்பட்ட வீடியோக்காட்சிகள் உண்மையானவை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

மொபைல் போனில் எடுக்கப்பட்ட வீடியோக்காட்சிகளை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வுச்செய்ததாகவும், இலங்கைக்கூறும் மறுப்பு பொய்யென்று தெளிவானதாகவும் ஐ.நா வின் மனித உரிமைக்கான தூதர் பிலிப் ஆல்ஸ்டன் கூறுகிறார்.

இந்தச்சூழலில் போர்க் குற்றங்களை குறித்து இலங்கை அரசு பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தவேண்டுமென்றும் ஆல்ஸ்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் பிரிட்டனிலிலுள்ள தொலைக்காட்சி சேனலான சேனல்-4 இக்காட்சிகளை வெளியிட்டது. தொடர்ந்து இக்காட்சிகள் உண்மையானவையா? என்பதை கண்டறிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திர வல்லுநர்கள் குழுவைக்கொண்டு ஆய்வுச்செய்ய உத்தரவிடப்பட்டது. ஃபாரன்சிக் வல்லுநர் டானியல் ஸ்பிட்ஸ், ஆயுத பரிசோதனை வல்லுநர் பீட்டர் டயாசூக், வீடியோ பரிசோதனை வல்லுநர் ஜஃப்ஸ்பெவாக் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஏற்கனவே இலங்கை அரசும் இது பற்றி விசாரிக்க ஒரு குழுவை நியமித்திருந்தது. ஆனால் இக்குழு வீடியோக்காட்சிகள் போலியானவை என்று கூறியிருந்தது. கண்ணைக்கட்டி நிர்வாணமாக்கி பின்னாலிருந்து தமிழ்புலிகளை சுட்டுத்தள்ளும் வீடியோக்காட்சிகளைத்தான் பிரிட்டன் சேனல் ஒளிபரப்பியது. இது தெளிவான மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றமென்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெளிவுப்படுத்தியிருந்தன.

இதற்கிடையே யுத்தக் குற்றங்களைக் குறித்து பாரபட்சமற்ற முறையிலான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற ஐ.நா வின் கோரிக்கைக்கு இலங்கை அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. வீடியோக்காட்சிகள் இலங்கை ராணுவத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என்று இலங்கை ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது. பல ஆண்டுகள் நீடித்த தமீழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் கடந்த ஆண்டு நடந்த இலங்கை ராணுவ நடவடிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது

No comments: