Nov 3, 2009
பாபர் மசூதியை இடித்தது மத வெறிச்செயல்: சிதம்பரம்
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது மத வெறிச்செயல் என்றும் மிகக்கேடானது என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.தேவ்பந்தில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் ஜாமியாத் உலேமா-ஐ-ஹிந்த்தின் 30வது பொதுக்குழுவில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று சிதம்பரம் பேசியதாவது:
வகுப்புவாதம் எந்த வகையில் உருவெடுத்து வந்தாலும் அது வருந்தத்தக்கது.பெரும்பான்மை சமுதாயத்தினரின் மிக முக்கிய கடமை சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு தருவதாகும். மதத்தின் பெயரால் வன்முறைப் பாதையை கையாள்வதும் வருந்தத்தக்க ஒன்றே. பயங்கரவாதத்துக்கு எதிராக கடந்த ஆண்டில் தேவ்பந்த்தில் உள்ள இஸ்லாமிய நிறுவனம் கட்டளை பிறப்பித்தது. இதை முஸ்லிம்கள் மட்டும் அல்ல நற் சிந்தனைகொண்ட அனைவருமே பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான குரல் அனைவரிடமும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இஸ்லாமை வேற்று மதமாக நாம் பார்க்கக்கூடாது. அது நமது சகோதர மதம். முஸ்லிம்கள் இந்தியாவின் குடிமகன்கள். இந்தியாவில் இஸ்லாம் உள்ளிட்ட பிரதான மதங்கள் இருப்பது மட்டும் அல்லாமல் அவை நன்கு வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதால் நமக்குத்தான் பெருமை என்றார் சிதம்பரம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment