Apr 30, 2011

கனிமொழியை காப்பது என்பது கட்சியை காப்பதாகும்!! முதல்வர்!!

சென்னை, ஏப். 30, கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார்.

நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது, என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டுமென்று கருதுகிறவனும் அல்ல.

நானே கைது செய்யப்பட்ட போது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் அல்ல.

சமீபத்தில் பத்திரிகையில் வந்த கணக்கெடுப்பு படி தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்க கனிமொழி உதவி உள்ளார்.

எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.

சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக்கொள்ள முடியாமல், சகித்துக்கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.

இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.

அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்லவில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன்.

எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன் என்றார் கருணாநிதி.

No comments: