Apr 30, 2011

தமிழர்கள் மீது பற்று இருப்பதை இந்தியா நிறுபிக்குமா??

சென்னை, ஏப். 30, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அதிபர் ராஜபக்சேயையும், ராணுவமும் போர் குற்றம் புரிந்தவர்களாக வழக்கு தொடுக்க வேண்டி ஐ.நா.சபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவளிக்க வேண்டும்.

இதன் மூலம் தமிழர் மீது தனக்கும் பற்றுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும், என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது தொடர்பாக தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை அரசு எவ்வளவோ முயற்சித்தும் இந்த அறிக்கை வெளியிடப்படுவதை தடுக்க முடியவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அவர்கள் இந்த போர்க் குற்றம் பற்றி சர்வதேச குற்ற விசாரணை மன்றத்திற்கு உறுப்பு நாடுகள் அல்லது ஐ.நா. பாதுகாப்பு குழுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்த பொழுதே இவை பற்றி நாம் எச்சரித்திருக்கிறோம். ஓரிரு நாட்களில் இலங்கையின் முப்படையினரும் 60,000 தமிழர்களை கொன்று குவித்தனர் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போதைய ஐ.நா. சபையின் அறிக்கை சுமார் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.

சிங்கள இனவெறி அரசு மனித உரிமை மீறி இருக்கிறது என்றும், அதிபர் மகிந்தா ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும் ஐ.நா. மன்றமே அறிவித்திருக்கிறது. இந்த போர்க் குற்றங்களுக்காக இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இந்த தீர்மானத்தை இந்திய அரசு இப்பொழுதாவது ஆதரவளித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீதும், மனிதாபிமான உரிமைகள் மீதும், தனக்கும் பற்று இருக்கிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். இது உலகமெல்லாம் இருக்கின்ற தமிழர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, இந்தியாவிலேயே உள்ள தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பும் இதுதான்.

No comments: