Jan 7, 2011

தமிழகத்தில் ரூ. 33,020 கோடியில் புதிய மின் திட்டங்கள்.


சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை முற்றிலும் நீக்கும் வகையில் ரூ. 33,020 கோடியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் ரூபாய் 4,600 கோடி செலவில் 1200 மெகாவாட் அனல் மின் திட்டம், மேட்டூரில் ரூபாய் 3,100 கோடி செலவில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம், சென்னைக்கு அருகில் வல்லூரில் மத்திய அனல் மின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1500 மெகாவாட் அனல் மின் திட்டம், தூத்துக்குடியில் ரூபாய் 4,909 கோடி செலவில் 1000 மெகாவாட் அனல் மின்திட்டம், உடன்குடியில் பாரத மிகுமின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

பவானி மற்றும் பெரியார் அணைகளில் ரூபாய் 1,285 கோடி செலவில் கூடுதலாக 93 மெகாவாட் புனல் மின் உற்பத்தி செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 1,126 கோடி முதலீட்டில் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.இதனால் 2012ல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: