Feb 12, 2011

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் வெற்றி!!!


கொழும்பு, பிப்.12-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்கின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென் ஆப்பிரிகா-ஜிம்பாப்வே அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 41.5 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டெய்லர் 40 ரன்களும், வில்லியம்ஸ் 35 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 23.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காலிஸ் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ஆம்லா 45 ரன்களும், சுமித் 41 ரன்களும் எடுத்தனர்.

இலங்கை-நெதர்லாந்து அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் கொழும்பு சிங்ஹலிஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நெதர்லாந்து அணி 47.3 ஓவர்களில் 195 ரன்களில் ஆட்டம் இழந்தது. கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, கென்யாவை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 253 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய கென்யா அணி 45.3 ஓவர்களில் 192 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. சிட்டகாங்கில் நடந்த வங்காளதேசம்-கனடா இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கனடா 37.3 ஓவர்களில் 112 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

No comments: