Oct 9, 2013

தேர்தலின் மூலம் உரிமைகள் கிடைத்துவிடுமா?

Oct 10/2013: நடந்த முள்ளிவாய்க்காலின் கொலைக் களத்திலிருந்து இன்னமும் மீளாத ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேர்தலை சந்தித்துள்ளனர். அனைத்துத் தேர்தல்களையும் விட இந்தத் தேர்தல் காலத்தாலும் சூழலாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

1987-ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திய - இலங்கை உடன்பாட்டில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அதற்கு தனி நிர்வாக சபை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கூறு இணைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இலங்கையை 2 தமிழ் மாகாணங்கள், 7 சிங்கள மாகாணங்கள் என 9 மாகாணங்களாகப் பிரித்தார். 

அதில் தமிழர் தாயகமான வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு இரண்டு தனித்தனி மாகாணங்கள் ஆக்கப்பட்டன. ஒன்றிணைந்த தாயகம் என்ற தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கையே நிராகரிக்கப்பட்டது. மேலும், இந்த மாகாணங்களுக்கு மிகக் குறைவான அதிகாரங்களே வழங்கப்பட்டன.  நில அதிகாரமும் காவல் துறை அதிகாரமும் மத்திய அரசின் வசமே இருந்தது.

1987-ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையின் முன்னிலையில் தமிழ் மாகாணங்களுக்கு முதன் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் இந்திய அரசின் கைப்பாவையாக இருந்த வரதராஜ பெருமாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய போது அவர்களுடன் வரதராஜ பெருமாளும் வெளியேறி இன்று வரை இந்திய அரசின் பாதுகாப்பில் இந்தியாவின் வடக்கு மாநிலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளார். அந்தத் தேர்தலுக்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து தற்போது வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறவிருப்பதை ஒட்டி எழுந்துள்ள பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ள மகிந்த இராஜபக்சே இந்தத் தேர்தலை நடத்தியுள்ளார். அதிலும் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் தேர்தல் நடத்தினால் தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதால், மேலும் இரு சிங்கள மாகாணங்களுக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சி 36 இடங்களில் 28 இடங்களைப் பிடித்து, அதன் மூலம் இரண்டு நியமன உறுப்பினர்களையும் பெற்று பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதிபர் மகிந்த இராஜபக்சேயின் ஆளும் கூட்டணியான அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 7 இடங்களையும் இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தையும் கைப்பற்றியுள்ளன. இந்தத் தேர்தலின் மூலம் ஈழத் தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைத்துவிடுமா?

No comments: