May 26, 2011

குமுறும் நெஞ்சு!! - கொதிக்கும் ரத்தம்!!

எங்கள் கதைகளைக்கேட்குமுன் தயவுசெய்து கழற்றிவையுங்கள் கண்ணீர்சுரப்பிகளை
இதயச்சுரப்பிகளில் இரக்கமில்லாதவர்களின் இனவெறிப்போதையில்
இறந்துகொண்டிருக்கும் எம்இனத்தின் கதை இது.
ஆண்டுகள் கடந்தும் பச்சை இரணமாய் எங்கள் இதயங்களில்.
இப்போது உங்களுக்கும்
..

அகதி ..அர்த்தம் புரியாமல் சொல்லாடல் செய்கின்றீர்கள்.
அன்னைமண்ணில் உயிருக்கு உறுதியில்லை என உத்தரவாதம் தந்தால்மட்டுமே
அகதிப்புகலிடம் கொடுக்கும் அந்நிய நாடுகள்.
தாய்மடியில் தலைவைக்கப் பயமாயிருக்கிறது என
தன்மானம்விட்டு எழுதிக்கொடுத்தே தஞ்சம் பெற்றிருக்கிறோம்
அடித்தாலும் ஆவென்று கத்தும் அருகதையில்லாதவன் தான் அகதி.


அடிமைப்பட்ட தேசமெல்லாம் என் அன்னைபூமி என்றான் சேகுவேரா
எங்கள் அன்னைப்பூமி அடிமைப்பட்டுக்கிடக்கிறது.
அகிம்சாவழியில் போராட எங்கள்எதிராளிகள் அந்நியர்களில்லை
சொந்தவீட்டில் சோற்றில் விசம்வைக்கும் சுயநலமிகள்.
பிடுங்கியெறியப்படவேண்டிய பில்லுளிகள்.
நாங்கள் எடுக்கவேண்டிய ஆயுதங்களை அவர்களே முடிவுசெய்தனர்

அடிபட்ட காயங்கள் ஆறுமுன் அடுத்தஅடி
இதயம் நொறுங்கி இறைந்துகிடக்கிறோம் உலகமெங்கும்.
மரணஅறிவித்தல் பார்த்துதான் தெரிந்துகொள்கிறோம்
மரித்துப்போனதாய் நினைத்த உறவு
உலகின் ஏதோ ஓர் மூலையில் இதுநாள்வரை வாழ்ந்து வந்ததை.

கிளஸ்டர் குண்டுகள் கேள்விப்பட்டதுண்டா ..?
ஐ நா தடைசெய்து ஆண்டுகள் பலவாயிற்று
செல்லடித்த காயத்தில் மருந்துக்கும்வழியின்றி சீழ்சொட்ட
ஈனமாய் முனகும் ஒருகுழந்தை..அதற்கு
தன் வறண்டுபோனநாவில் எச்சில்தொட்டு மருந்திடும் இன்னோர்குழந்தை
கண்டதுண்டா...? கண்டவர்கள் கதறினோம் இன்னம் கண்ணவிந்துபோகவில்லையே என்று.
கொஞ்சங்கொஞ்சமாய் கொன்றும் குறையவில்லையாம்
கொத்துக்கொத்தாய் கொன்றார்கள்.
சிதைந்த உடலில் சிறிது உயிரே மிஞ்சியிருந்தது
சொல்லாமல் புதைத்தோமே ..எங்கள்உளம் பட்டபாட்டை எங்குசொல்ல..?
அடங்கும்வேளையில் ஆறடிநிலம் சொந்தம்..
எங்களுக்கோ ஆறடியில் ஆயிரம் உடல்களைப்புதைத்த அவலம்.

எங்கள் பச்சைத்தீவின் கவின்மிகுகரைகளில்
பாட்டன் கைப்பிடித்து நடந்திருந்தோம் ..
"பிள்ள நம் தீவைச்சுற்றி இருப்பது கடல்நீரோ..கண்ணீரோ இல்லை
நம்மை இங்க வாழவைக்கும் நம் குலசாமிகளின் செந்நீர் "
இன்றும் ஒலிக்கிறது எங்கள் காதுகளில்.
எங்கள் குலசாமிகள் கொல்லப்பட்டனர்... நாங்கள் நாடின்றி நாதியின்றி ..

பெற்றவரை இழந்த பிள்ளைகள் எத்தனை..
பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்க்கைத்துணை இழந்த வலிகள் எத்தனையெத்தனை
சகோதரிகள் சிதைபடாமல் செத்திருக்க வேண்டும்..நெஞ்சுபிளக்கும் வேண்டுதல்கள் எத்தனை
தம்பிஅண்ணனை இழந்த சகோதரநெஞ்சங்களில் துயர் எத்தனை
ஈராண்டல்ல ...இருநூறு ..இருகோடி நூற்றாண்டுகளாயினும்
இகம் மறக்காது எங்கள் இனத்தின் இருண்டகதை.

சத்தம் செய்த துப்பாக்கிமுனைகள்
ஆற்றுப்படுத்துதல் வேண்டி மௌனித்திருக்கிறோம்..மரணித்துவிடவில்லை
எங்கள் பேனாமுனைகள் இளைத்தவையல்ல..யுத்தம் செய்யும் இடையறாது.
ஆட்சிகளை மாற்றிய பேனாமுனைகள்..ஆவன செய்யும் எங்களுக்கும்
இன்னும் தீர்ந்துவிடவில்லை மனிதம்
படிக்கும் உம்மீதும் நம்பிக்கை வைத்துக்காத்திருக்கிறோம்.

பாலுக்கழுத பிள்ளைவரை கொன்றபின்பு அமைதிநிலவுகிறதாம்
வெள்ளைக்கொடி காட்டுகிறார்கள் ..
நினைவிற்கொள்ளுங்கள் உங்கள் சமாதானக்கொடிகள்
நாட்டப்பட்டிருப்பது எம்சவக்குழிகளின் மீது.
புதைக்கப்பட்ட ஒற்றைவிதை கூட உரியநாளில் முளைத்துவரும்
நாங்கள் நட்டிருப்பது பல்லாயிரம்விதைகளை பலனெனவளரும் எமக்கான தேசம்.
எரித்த சாம்பலிலிருந்தும் எழுந்துவருவோம் சிறகுகள் சிலிர்க்க..!!

1 comment:

Anonymous said...

என் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறியுள்ளீர்கள்.

“எரித்த சாம்பலிலிருந்தும் எழுந்துவருவோம் சிறகுகள் சிலிர்க்க..!!”

என்ற வரிகள் உண்மையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை...ஈழ தேசம் மலர்ர்வது உறுதி.....

நன்றி...............