Mar 16, 2011

அரசியல் கோமாளிகளும்!! அவர்களது வாய்ஸ்களும்!!

ரஜினி நினைத்தால் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து ஜெயிக்க வைக்க முடியுமா?. தமிழக மக்களெல்லாம் இளித்த வாயர்களா? நமது தலையெழுத்தை இந்த கட்டவுட் நாயகன்தான் தீர்மானிப்பான். தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன?

1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதொல்வியுற்று, தி.மு.க பெரு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, ” அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தி.மு.கவிற்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசினார். உடனே தமிழக மக்கள் ஜெயாவை தூக்கி கிடாசிவிட்டு கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று பல அறிவாளிகளும், ஊடகங்களும் ஒரு பொய்யை வரலாற்றில் பதிந்திருப்பதோடு அவ்வப்போது அதை நினைவுபடுத்தவும் செய்கிறார்கள்.

நடந்த உண்மை என்ன? அந்த தேர்தலுக்கு முன் தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஜெயா-சசி கும்பல் பாசிச வெறியாட்டம் போட்டதோடு, முழு தமிழகத்தையும் மொட்டை போட்டது. ஊழல், சொத்து சேர்ப்பு, அதிகார ஆணவம், ஈழம் மற்றும் தமிழின ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை என்று சர்வாதிகாரத்தில் பீடை நடை போட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு யாரும் எடுத்துக் கொடுக்க தேவையில்லாமல் ஜெயா கும்பல் மீது கடும் வெறுப்பு இருந்தது.

அந்த தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும். அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்?

அன்று தா.மா.காவையும் தி.மு.கவையும் இணைப்பதற்கு இந்த சோ ராமசாமி பாடுபட்டாராம். யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.