Dec 29, 2010

தமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு இழைத்துவரும் கொடுமைகள்.

கொழும்பு, டிச.29- இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து கொடுமைகளை செய்து வருகிறது என்றும், இதுதொடர்பான விவரங்களை மனித உரிமை அமைப்புகளுக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்பிப்போம் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலங்காலமாக இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவந்துள்ள இன அழிப்பு முயற்சிகளை மிகக் கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் தமிழ்ப் பெண்கள், சிறுவர், முதியோர் ஆகியோரே. இலங்கை படைகள் சென்ற ஆண்டு நடத்திய போரின்போது அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொண்ட குண்டு வீச்சுக்கள், கொலைகளின் போது கூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்களும் இவர்களே.

அண்மைக்காலமாக ஊடகங்கள் வழியாக ஈழப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரக் கொடுமைகள், சித்ரவதைகள், படுகொலைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளெல்லாம் கொடூரமான கதையொன்றின் சிறுபகுதி மட்டுமே. இளம்பெண்கள் எத்தனையோ பேர் இலங்கை அரசின் பிடியில் சிக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு தினமும் உள்ளாகின்றனர். ஊடகவியலாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, உசாலினி மற்றும் பலரது கொடூரம்மிக்க அனுபவங்கள் இலங்கை அரசின் கைகளில் தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடின்றிக் கொடுமைக்குள்ளாவதைத் தெளிவாக்குகிறது.

எமது அமைச்சகமானது பெண்கள் சிறுவர் முதியோர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச அளவில் இயங்கும் பெண்களுக்கான இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு ஆவணங்கள் மூலமாகவும்; நேரடித் தொடர்புகள் ஊடாகவும் கொண்டு வந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பெண்கள் அமைச்சகம், நிழல் அமைச்சகம் போன்றவற்றுடனும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பாலாம்பிகை முருகதாஸ் அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.

No comments: