Dec 29, 2010

இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குத் தனித்தனி கொடிகள் உருவாக்கப்படவேண்டும்.


இந்தியாவிலுள்ள மாநிலங்களுக்குத் தனித்தனி கொடிகள் உருவாக்கப்படவேண்டும்; ஆகஸ்ட் 15ம் தேதியன்று மாநிலக் கொடிகளும் ஜனவரி 26ம் தேதியன்று தேசியக் கொடியும் ஏற்றப்படவேண்டும் என்றும் சென்னையை அடுத்த மறைமலை நகரில் நடைபெற்ற விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன. இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர், தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது. எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப் போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

No comments: