Jun 13, 2010

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியது.


இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அமெரிக்க இசைப் பயணம் கோலாகலமாக தொடங்கியுள்ளது. 'A.R. Rahman Jai Ho Concert: The Journey Home World Tour' என்ற பெயரிலான இந்த இசைப் பயணம், இதுவரை இல்லாத அளவுக்கு
பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீபக் கட்டானி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து தயாரித்துள்ளார். உலகம் முழுவதும் 20 நகரங்களில் இது நடைபெறுகிறது.

அமெரிக்காவிலும், பின்னர் கனடா, நெதர்லாந்து, பிரான்ஸ், நார்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அமெரிக்காவில் நியூயார்க், அட்லான்டிக் சிட்டி, வாஷிங்டன், சிகாகோ, டெட்ராய்ட், டோரன்டோ, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்செலஸ், டல்லாஸ், ஹூஸ்டன் ஆகிய நகரங்களிலும், ஆம்ஸ்டர்டாம், பாரீஸ், ஆஸ்லோ, கிளாஸ்கோ, மான்செஸ்டர் மற்றும் லண்டன் நகரங்களிலும் இசை விருந்து படைக்கிறார் ரஹ்மான்.

தனக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஜெய்ஹோ பாடலின் பெயரிலேயே இந்த இசைப் பயண நிகழ்ச்சியை தொடங்கியுள்ளார் ரஹ்மான். முதல் நிகழ்ச்சி நியூயார்க்கில் பிரமாண்டமானதாக நடந்தது. இதில் கோட், சூட்டில், தலையில் தொப்பி அணிந்தபடி கேஷுவலாக நடனமாடியபடி, பாடியபடி ரஹ்மான் தனது நிகழ்ச்சியை நடத்தினார். மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பிரபலங்களுக்காக நடனம் வடிவமைத்தவரான அமி டிங்காம் இந்த நிகழ்ச்சியின் நடனத்தையும் வடிவமைத்துள்ளார்.

இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் மேற்கத்திய நடனங்களின் கலவையுடன், ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி வித்தியாசமான விருந்தாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்த இசைத் தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் விலை உயர்ந்த, வித்தியாசமான உடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரஹ்மானும் கூட தனது முதல் நிகழ்ச்சியின்போது படு ஸ்டைலாக உடையணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: