வாஷிங்டன்: இனி யாரும் இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன பலன் என்று கேட்டுவிட முடியாது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு கணிசமானது என்பதை உலகுக்கு உணர்த்தும் உண்மைகள் வெளிவரத் துவங்கியுள்ளன, அதுவும் அதிகாரப்பூர்வமாக.
சர்வதேச அளவில் இந்தியா என்றாலே அவுட்ஸோர்ஸிங் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், அமெரிக்காவில் 60000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளன இந்திய நிறுவனங்கள்.
அமெரிக்காவில் 2004 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் 26.5 பில்லியன் டாலர் மதிப்பில் 500 முதலீடுகளைச் செய்துள்ளன இந்திய நிறுவனங்கள். இந்தியா மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் பெற்றுள்ள நன்மைகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் அருண் சிங் முன்னிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டவர் அமெரிக்க காங்கிரஸில் முக்கியமானவரான ஜிம் மெக்டர்மாட்.
அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா பதவி ஏற்றபிறகு, வெளிநாடுகளில் அவுட்ஸோர்ஸிங் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் கிடையாது என்றும், அமெரிக்காவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்படும் என்று கூறிவிட்டது நினைவிருக்கலாம்.
ஆனால் இந்திய - அமெரிக்க வர்த்தக உறவு இதனால் பாதிக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவால் அமெரிக்கா பெருமளவு பலனடைந்துள்ளது. 2004-2009 வரையிலான காலகட்டத்தில் 90 இந்திய நிறுவனங்கள் 5.5 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட 127 கிரீன்ஃபீல்ட் முதலீடுகளைச் செய்துள்ளன, அமெரிக்காவில். (கிரீன்ஃபீல்ட் முதலீடு என்றால், புதிய நிறுவனத்தை, அதற்குரிய அனைத்து கட்டமைப்பு வசதிகளுடனும் புதிதாக உருவாக்குவது என்று அர்த்தம்.)
இவற்றின் மூலம் 16576 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னஸொட்டா, வர்ஜீனியா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்கள் இதில் அதிக பலனடைந்துள்ளன. இந்த முதலீடுகளில் பெரும்பங்கு, பலரும் நினைப்பது போல ஐடி துறையில் செய்யப்படவில்லை. மாறாக, சுரங்கம், உற்பத்தித் துறை மற்றும் பரிற கனரக கனிம உற்பத்தித்துறையிலேயே முதலீடு செய்யப்பட்டன.
இது தவிர கடந்த 5 ஆண்டுகளில் 239 இந்திய நிறுவனங்கள் 372 அமெரிக்க நிறுவனங்களை வாங்கியுள்ளன. பெரும்பாலும் மெட்டல்ஸ், சாஃப்ட்வேர், பொழுதுபோக்கு, தொழிற்சாலை உபகரண உற்பத்தி, நிதித் துறை போன்றவை இந்த கையகப்படுத்தலில் பலன் பெற்றன.
இந்த ஆய்வை மேரிலாண்ட் பல்கலைக் கழகமும், இந்திய - அமெரிக்க சர்வதேச தொடர்புகளுக்கான மையமும் சேர்ந்து மேற்கொண்டன
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment