Apr 18, 2011

போர் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்!!

இலங்கையின் அரச தலைவர்களையும், படைத்தலைவர் களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என தமிழீழ அரசாங்கம் நம்புகிறது என அறிவித்துள்ளார் வி.உருத்திரகுமாரன்.

ஐ. நா பொதுச் செயலாளரின் நிபுணர்குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்க் குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதை நியாயப்படுத்திக் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்துமீறல்களில் நான்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன ஒழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவையாவன:

1) பரந்துபட்ட குண்டுத் தாக்குதல் மூலம் பொது மக்கள் கொல்லப்பட்டமை,

2) வைத்தியசாலைகளும், பாடசாலைகள் உட்பட பொதுமக்கள் வதிவிடங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது,

3) மனிதாபிமான உதவி மறுப்பு,

4) போரில் உயிர் தப்பிப் பிழைத்து உள்ளூரில் இடம் பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனிதஉரிமை மீறல்கள் ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் இயக்கப்பெற்று பாதுகாப்பற்ற வன்னிப்பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை என்பதனால், திட்டமிடப்பட்டு இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக் நிருபனமாகின்றது.

மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேகத் தீங்கான இனரீதியான அரசியல், சமூக, பொருளாதாரரத் தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள் தொடர்ந்தும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதைச் சான்றுபடுத்தும். இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டுமொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறிவந்ததை ஊர்ஜிதப் படுத்துகின்றது.

போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியானதுடன் இலங்கை அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது.

இறுதியில் இலங்கையின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடாத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது.

அந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு, ஆட்கடத்தல், பரந்துபட்ட குண்டுத்தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் முயற்சிகள் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியிலிருந்தே அபிப்பிராயப்பட்டது போன்று இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பலத்த விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவு குறைபாடுகளுடையது என்பதுடன் சர்வதேசத் தரத்திற்கு அமைய நம்பகத் தன்மையற்றதும், செயற்திறன் அற்றதுமாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஜ.நா குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்ப்பிக்கப் பட்டதுடன் திரு நடேசன் அவர்களின் மகனுடைய நேர்முக வாக்குமூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

திரு நடேசன் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனது வாக்குமூலம், நடேசனின் இறுதிக் கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது.

இன்னுமொரு நம்பகரமான சாட்சியம் கேணல் ரமேஸ் அவர்களின் மனைவியால் வழங்கப்பட்டது. இலங்கையின் அரச தலைவர்களையும், படைத்தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்க்குற்றங்கள், மனித விரோத மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் நம்புகின்றது.

இவ் அறிக்கை, இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக் காலத்திலும் ஜ.நா.வினதும், மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.

இவ்வறிக்கை ஜ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப் பரிமாறலை இவ்வறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்கள் உளமார்ந்த நம்பிக்கை.

தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால், நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச்செய்வது உசிதமல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசங்கம் இங்கே கோடிட்டுக்காட்டுகின்றது.

விசுவநாதன் ருத்திரகுமாரன்,

பிரதமர்: தமிழீழ அரசாங்கம்.

No comments: