
பாரிஸ் : "கடந்த 19 ஆண்டுகளாக, அல்ஜீரியாவில் நடைமுறையில் இருந்து வரும் "எமர்ஜென்சி' நிலை விரைவில் தளர்த்தப்படும்,' என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவுரத் மெதல்கி கூறியுள்ளார். டுனிசியா, எகிப்து போன்ற அரேபிய நாடுகளில், மக்கள் கிளர்ச்சி காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அல்ஜீரிய நாட்டிலும் தற்போது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1992 முதல் அந்நாட்டில், எமர்ஜென்சி அமலில் உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று, நாட்டின் தலை நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். அதோடு, அல்ஜீரிய அரசு எமர்ஜென்சி நிலையை நீக்கும்வரை, ஒவ்வொரு வார இறுதியிலும் போராட்டம் நடத்துவோம், என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எகிப்தில் ஏற்பட்ட நிலைமை இங்கு வேண்டாம்,' என நினைத்த அல்ஜீரிய அரசு, எமர்ஜென்சியை தளர்த்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, பிரான்ஸ் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் மவுரத் மெதல்கி கூறியதாவது: வரும் நாட்களில், எமர்ஜென்சி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். அதன்பின், தற்போது அமலில் உள்ள எமர்ஜென்சி நிலை தளர்த்தப்பட்டு, மக்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுவர் என்று அல்ஜீரிய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment