Dec 9, 2010

பயங்கரவாத இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள்.

கொழும்பு, டிச.9: இலங்கை ராணுவத்தினரின் போர் குற்றங்கள் தொடர்பான மேலும் சில விடியோ ஆதாரங்களை பிரிட்டனின் சேனல் 4 வெளியிட்டுள்ளது. இதில் ஆடைகள் ஏதும் இன்றி கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ஏராளமான தமிழர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு கிடக்கும் கொடூரமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் இலங்கை மீது ஐ.நா. போர் குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில், சரணடைந்த விடுதலைப்புலிகள், தமிழர்கள் பலர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். இது தொடர்பான விடியோ ஆதாரங்கள் சிலவும் வெளியிடப்பட்டன. அதில், விடுதலைப் புலிகளின் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய இசைப்பிரியா என்ற இளம்பெண் கொடூரமாக மானபங்கப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்படும் காட்சியும் வெளியானது.

இப்போது கிடைத்துள்ள விடியோவில் ஏராளமான தமிழர்கள் பின்புறம் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் உடலில் ஆடைகள் ஏதும் இல்லை. அவர்கள் அனைவரும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரிகிறது.

இது குறித்து நியூயார்க்கில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவத்தின் 53-வது படைப்பிரிவு இத்தகையை கொடூரங்களை அரங்கேற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இலங்கை அரசு மறுத்துள்ளது. இவை அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட விடியோக்கள் என்று கூறியுள்ளது.

No comments: