Nov 13, 2010

வாக்கிங்' சென்றால் மூளைக்கு சுறுசுறுப்பு வயதாவதால் ஏற்படும் மறதி நோய் வராது.


ஒவ்வொருவரும் தினசரி குறிப்பிட்ட தூரம் நடைபயிற்சி செய்வது சிறந்தது. இதனால் உடலின் உறுப்புகள் நன்கு இயங்குகின்றன. இந்நிலையில் நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து அமெரிக்காவில் பிட்ஸ்பர்க்கில் ஆய்வு செய்யப்பட்டது. 300 பேருக்கு தினசரி 6 மைல் தூரம் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நடை பயிற்சி செய்பவர்களை விட நடைபயிற்சி செய்யாதவர்களின் மூளை விரைவில் சுருங்கி விடுகிறது என தெரியவந்துள்ளது.

இதனால் வயது ஆவதன் காரணமாக ஏற்படும் "அல்சீமெர்' என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் இரண்டு கோடியே 60 லட்சம் பேர் "அல்சீமெர்' என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிக்சன் மற்றும் அவருடன் பணி செய்யும் ஆய்வாளர்கள், அல்சீமெர் மற்றும் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட 300 பேருக்கு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் நடைபயிற்சி அளித்தனர். இதில், 299 பேர் நல்லநிலைக்கு திரும்பினர். அவர்களின் மூளையில் ஏதாவது சேதாரம் ஏற்பட்டுள்ளதா என்று விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்து பார்த்து ஆய்வு செய்தனர். இதில், ஆறு முதல் ஒன்பது மைல் தூரம் நடப்பதால் அவர்களின் மூளை செல்கள் பலமடைவது தெரியவந்தது.

அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆய்வாளர் கிர்க் எரிக்சன் இதுகுறித்து கூறியதாவது:வயதாக, வயதாக மூளையின் அளவு சுருங்குகிறது.இதனால், வயதானவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ளும் திறனும் படிப்படியாக குறைகிறது. இதை தடுக்கும் வகையில் எங்களின் ஆய்வு முடிவுகள் உள்ளன. முதியவர்களுக்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி அளிப்பதால் அல்சீமெர் என்ற மறதி நோய், டிமென்ஷியா என்ற மனநோய் ஆகியவை தடுக்கப்படுகின்றன.

அல்சீமெர் நோய் வந்த முதியவர்களின் மூளையில் உள்ள செல்கள் மெதுவாக கொல்லப்படுகின்றன.ஆனால், முதியவர்களுக்கு நடைபயிற்சி அளிக்கும் போது, அவர்களின் மூளை பலமடைகிறது. அல்சீமெர் நோய் வந்தவர்கள் முறையாக டாக்டர்களிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையில் ஒன்றாக நடைபயிற்சி உள்ளது. வயதான காலத்தில் மூளை நல்ல நிலையில் இருப்பதற்கும், நினைவு திறன் பாதிக்காமல் இருப்பதற்கும், நடுத்தர வயதில் மேற்கொள்ளும் முறையான உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி பெருமளவில் உதவுகிறது. எனவே, உடல்நலம் காக்க எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கிர்க் எரிக்சன் கூறியுள்ளார்.

1 comment:

ப.கந்தசாமி said...

நல்ல உபயோகமான செய்தி.