Nov 13, 2010

15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து விடுதலையானார் ஆங் சான் சூகி.


யாங்கூன் : மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி(65), 15 ஆண்டுகால வீட்டுக் காவலில் இருந்து நேற்று மாலை விடுதலையானார். அவரின் வீட்டின் முன் கூடியிருந்த ஏராளமான தொண்டர்கள், இந்த விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மியான்மர் விடுதலை போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் - கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூகி. ஆரம்பத்தில் டில்லியில் படித்த சூகி, பின்னர் பிரிட்டன் சென்று ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணந்து குடும்பத் தலைவியானார். மியான்மரில் 1962ம் ஆண்டில் இருந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், 1988ல் தன் தாயாரைக் கவனிப்பதற்காக யாங்கூனுக்கு வந்த சூகி, நாடு முழுவதும் ராணுவ ஆட்சிக்கு நிலவிய எதிர்ப்பைக் கண்டு, தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் துவக்கி அரசியலில் ஈடுபட்டார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினார். இதனால், அவரின் செல்வாக்கு அதிகரித்தது. இதையடுத்து, 1989ம் ஆண்டில், பாதுகாப்பு காரணங்களை கூறி, அவரை மியான்மர் ராணுவ அரசு, வீட்டுக் காவலில் வைத்தது. 1995ம் ஆண்டு வரை அவரது வீட்டுக் காவல் தொடர்ந்தது. அதன்பின் சில காலம் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வீட்டுக் காவலில் அல்லது சிறையில் இருந்துள்ளார்.

அவரை விடுவிக்கும்படி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும், மியான்மர் ராணுவ அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில், 1990ல் மியான்மரில் முதன் முதலாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரு வெற்றி பெற்றது. இருந்தும், அவரிடம் அரசை ஒப்படைக்க ராணுவ ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர். அதே நேரத்தில், 1991ம் ஆண்டில் ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், 20 ஆண்டுக்குப் பின், இம்மாதம் 7ம் தேதி மியான்மரில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சூகியின் கட்சி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், ராணுவ ஆட்சியாளர்களே 80 சதவீத இடங்களை கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆங் சான் சூகியின் வீட்டுக் காவல் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. அன்றைய தினமே அவர் விடுதலை செய்யப்படுவார், அதற்கான ஆவணத்தில் ராணுவ ஆட்சித் தலைவர் தான் ஷ்வே கையெழுத்திட்டு விட்டார் என, செய்திகள் வெளியாகின. நேற்று மாலை சூகி விடுவிக்கப்பட்டார். அதிகாரிகள் சூகியின் வீட்டுக்கு சென்று, அவரது விடுதலைக்கான உத்தரவை வாசித்துக் காண்பித்தனர். சூகியின் விடுதலையால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய அவரது கட்சித் தொண்டர்கள், அவரது வீட்டு முன், போலீசாரால் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து முன்னேறினர். தன்னைப் பார்ப்பதற்காக கூடியிருந்த தொண்டர்களுக்கும் இதுவரை தனது விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும், சூகி தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

No comments: