Nov 13, 2010

கனடாவுடன் அதிக வர்த்தகம் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி: மன்மோகன்.


சியோல் : ""இந்தியா - கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும்,'' என, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தெரிவித்துள்ளார். தென்கொரியாவின் சியோல் நகரில் ஜி-20 நாடுகளின் ஐந்தாவது மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், அங்கு கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரைச் சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

அதன்பின் நிருபர்களிடம் பேசிய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறியதாவது: இந்தியா - கனடா இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் துவங்கும். அப்படி தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால், இரு நாடுகளும் பெருமளவு பலன் அடையும். குறிப்பாக இருநாட்டு வர்த்தக சமூகத்தினர் மிகுந்த நன்மை பெறுவர். தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை துவங்க முடிவு செய்ததே, இரு நாட்டு உறவில் ஒரு மைல் கல். இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அதிகரித்துள்ளதையும் அது காட்டுகிறது. இவ்வாறு ஹார்பர் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், "கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், 2009ம் ஆண்டில் இந்தியா வந்தார். அதேபோல், இந்த ஆண்டு ஜூன் மாதம் நான் கனடா சென்றேன். எங்கள் இருவரின் விஜயங்களுக்குப் பின், இருநாட்டு உறவுகள் பெருமளவு மேம்பட்டுள்ளன. அதுவே தாராள வர்த்தக ஒப்பந்தம் போடுவதற்கான பேச்சுவார்த்தையை துவக்கும் அளவுக்கு சென்றுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்கனவே, சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது' என்றார். இந்தியா - கனடா இடையே தற்போது 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது.



கனடாவில் இருந்து காய்கறிகள், உரங்கள், இயந்திரங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து ரசாயனங்களையும், பின்னலாடைகள் மற்றும் ஆயத்த ஆடைகள், விலை உயர்ந்த கற்கள், மின்னணு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்றவற்றை கனடா இறக்குமதி செய்கிறது. ஆசியா நாடுகளுடனும், மற்ற சிலநாடுகளுடனும் இந்தியா ஏற்கனவே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: