Nov 5, 2010

தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது. முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்.

தீபாவளி தேசியத் திருவிழா கிடையாது. முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
ஒரு விழா என்றால் அதில் பொருள் கருத்து இருக்கவேண்டும். ஆனால் தீபாவளியிலோ ஒரு பொருளும் இல்லை. பொருள் காசு செலவானதுதான் மிச்சம். காசு கரியானதுதான்-பட்டாசு வெடித்துக் கரியானது, அதாவது வீணானது தான் மிச்சம்.தீபாவளி ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், நரகாசுரன் கதை என்று ஒரு கதையைக் கூறுவார்கள். புராணக் கதையில் எதிர்பார்க்கக் கூடாதுதான்-இருந்தாலும் மனக்கேட்டை முட்டாள்தனமான காரியமாக இல்லாமல் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

தீபாவளியைக் கொண்டாடப் போகிறீர்களா? அடிப்படைக் கதை தெரியுமா? ஆபாசத்தின், அக்கிரமத்தின் எவரெஸ்ட் தீபாவளி:

1. இந்த உலகம் என்கின்ற பூமியை இரண்யாட்சதன் (தங்கக் கண்ணன்) பாயாகச் சுருட்டி தூக்கிக்கொண்டு சமுத்திரத்துக்குள் போய் ஒளிந்து-கொண்டான்.

2. மகாவிஷ்ணு (கடவுள் பன்றி உருவமெடுத்து) சமுத்திரத்துக்குள் சென்று இரண்யாட்சதனைக் கொன்று பூமியைக் கொண்டு வந்து விரித்துவிட்டான்.

3. பூமிக்குப் பன்றி மீது காதல் ஏற்பட்டு பன்றியுடன் காமலீலை செய்தது

4. அதன் பயனாக ஓர் ஆண் பிள்ளை பிறந்தது. அதன் பேர் நரகாசுரன். அவன் தேவர்களுக்கும், தேவேந்திரனுக்கும் துன்பம் விளைவித்தான்.

5. கடவுள் கிருஷ்ண உருவத்தில், அப்பிள்ளையான நரகாசுரனைக் கொல்ல அவனுடன் யுத்தம் செய்து அடிபட்டு மூர்ச்சித்தார்.

6. கடவுள் மனைவியாகிய சத்தியபாமை வந்து நரகாசுரனுடன் போர் செய்து அவனைக் கொன்றாள்.

7. கொன்ற அந்த நாளை நாம்திராவிடர்கள் கொண்டாட வேண்டுமாம்!

அதுதான் தீபாவளிப் பண்டிகையாம்?! -தந்தை பெரியார் (விடுதலை 24.10.1956).


இராமாயணக் கதை

தீபாவளி ஒரு கற்பனைப் பண்டிகை என்பதற்கு எடுத்துக்காட்டு மேலே குறிப்பிட்ட நரகாசுரன் கதை இராமாயணக் கதையோகும். தீபாவளியை வடநாட்டில் தொடர்பு படுத்திக் கொண்டாடுகிறார்கள். இராவணணுடன் போர் புரிந்து வென்று ராமன் அயோத்திக்குத் திரும்பும் நாள்தான் தீபாவளியாம்.

மனிதநேயர்கள் ஒருவன் இறந்தநாளைக் கொண்டாடுவது என்ன நாகரிகம், என்ன பண்பாடு? என்று வினா எழுப்பவே தீபங்கள் ஏற்றுவது ஒவ்வொரு மனிதனுள்ளும் இருக்கும் ஒளியை உணர்வது என்று புதிய விளக்கம் கூறினார்கள். ஆன்மா, கடவுள், மோட்சம் என்பதெல்லாமே புரட்டு என்று அய்யா கூறுகையில் பூத உடலுக்கு அப்பால் எல்லையில்லாப் பெருவெளியில் உள்ள மனத்தை அறிய ஏற்றப்படும் விளக்கு தீப ஒளி என்று கப்சாவைப் புதிதாகச் சேர்த்து ஆன்ம விளக்கங்கள் வேறு. வேடிக்கையாக இருக்கிறது.

நல்ல வாய்ப்பு தமிழ்நாட்டில் தீபாவளிக் கூத்து ஒரு நாளில் முடிந்துவிடுகிறது. வடநாட்டில் அய்ந்து நாள்கள் தீபாவளியாம். அங்கே செப்டம்பர், அக்டோபர் இடையே அதன் மாதத்தில் தொடங்கி கார்த்திகையில் அக்டோபர் - நவம்பரிடையே முடிவடைகிறது.

வடநாட்டில் லட்சுமி பூஜையாம்!

தீபாவளியோடு கிருஷ்ணன், இராமன், கற்பனையோடு நின்று விடுவதில்லை. வடநாட்டில் தீபாவளி என்றால் லட்சுமிபூஜை. எனவே விளக்கை ஏற்றி செல்வத்துக்கு அதிபதி என்று கருதும் லட்சுமியை வரவேற்கிறார்களாம்.

இங்கும் ஏதாவது புராணம், கற்பனைச் செய்தி இணைக்காவிடில் சுவைக்காதே. லட்சுமிக்கும், கிருஷ்ணனுக்கும், நரகாசுரன்; இராமனுக்கு இராவணன் போல் லட்சுமிக்கும் ஓர் அசுரன் வேண்டுமே மகாவலி கதையை எடுத்துக்கொண்டார்கள். பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விஷம் மட்டும் கிடைக்கவில்லை, அத்தோடு லட்சுமியும் கிடைத்தாள். அந்த நாள்தான் தீபாவளி என்று ஒன்றைக் கூட்டி-னார்கள்.

வாமன அவதாரம்

திருமாலின் அவதாரங்களில் ஒன்றாக வாமன அவதாரம். அது பார்ப்பன அவதாரம்.மகாபலி என்ற மன்னரை சத்திரியனை பார்ப்பன வாமனன் மூன்றடி மண் கேட்டு எங்கே நின்று தலையில் கால்வைத்துக் கொன்றானோ அவ்வாறு கொன்று விட்டு வைகுந்தம் வரும்போது வாசலில் நின்று லட்சுமி திருமாலை வரவேற்றாளாம். அதனால் வடநாட்டில் அது லட்சுமி பூஜையாம்.லட்சுமி என்பது சக்தி, விஷ்ணு என்பது மகிழ்ச்சி, என்றெல்லாம் என்னென்னவோ குளறுபடியைச் சேர்த்து லட்சுமி பஞ்சாயதன் என்று கூறினர். இதையெல்லாம் கேட்டு மூளை குழம்பாமலிருக்கவே இதை மேலும் விளக்காமல் விட்டுவிடுவோம்.

No comments: