Nov 5, 2010

அதிபர் ஒபாமா வருகை :டெல்லி, மும்பையில் வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு.


அமெரிக்க அதிபர் ஒபாமா, நாளை காலை 11.50 மணிக்கு மும்பை வருகிறார். இதற்காக டெல்லி, மும்பையில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மும்பை நகரமே பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நவம்பர் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை 4 நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார்.

அவருடைய மனைவி மிச்சலும் உடன் வருகிறார். ஒபாமாவின் பயண திட்டங்கள் குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள், பாதுகாப்பு குழுவினர் இந்தியா வந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். நாளை காலை 11.50 மணிக்கு மும்பை வரும் ஒபாமா, ஹெலிகாப்டரில் கொலாபாவில் உள்ள ஐ.என்.எஸ். ஷிக்ரா கப்பலில் வந்திறங்குகிறார்.

அங்கிருந்து காரில் மும்பை தாஜ் ஓட்டலுக்கு செல்கிறார். அரபிக் கடலின் ஓரத்தில் எழில்மிகு இடத்தில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. 107 ஆண்டுகள் பழமைவாய்ந்த தாஜ் ஓட்டலின் நாளையும், நாளை மறுதினமும் தங்குகிறார். அதற்காக ஓட்டலில் உள்ள 565 அறைகளையும் முன்பதிவு செய்துள்ளதாகவும் வெளியாட்கள் யாரும் தங்க மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.எல்லா வழிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள காந்தி மியூசியத்தையும் அவர் பார்வையிடுகிறார். பின்னர் தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் வர்த்தக வாய்ப்புகளை பெருக்குவது, இரு நாடுகளுக்கு இடையில் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.

அமெரிக்க மக்களை கவர்ந்த மகாத்மா காந்தியை அதிபர் ஒபாமா மிகமுக்கிய தலைவராக மதிக்கிறார். எனவே, காந்தி மியூசியத்தை பார்வையிட ஒபாமா திட்டமிட்டுள்ளார். ஒபாமாவும், அவர் மனைவியும் இந்த பயணத்தின்போது தாஜ்மகாலை பார்க்கும் திட்டம் இல்லை. அதற்கு பதிலாக டெல்லியில் உள்ள மிகப்பெரிய கலாச்சார சின்னமான ஹுமாயூன் சமாதியை பார்வையிட உள்ளனர் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: