Nov 4, 2010

எனது பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்கா பின்னோக்கி செல்லாது: ஒபாமா.

வாஷிங்டன், நவ.4: தனது அரசு கடைப்பிடிக்கும் கொள்கைகளால் அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி செல்லாது என்று அதிபர் ஒபாமா உறுதி படக் கூறினார். ஒபாமா மேற்கொண்டுள்ள பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்கா பின்னோக்கி செல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு மாறாக பின்னோக்கி செல்கிறது என்று கூறப்படுகிறது. இதைப் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம் புரிவதில் எவ்வித பலனும் இல்லை. ஆனால் இப்போது பொருளாதாரம் ஒரு நிலையில் உள்ளது. இது முன்னோக்கியும் நகரவில்லை, பின்னோக்கியும் செல்லவில்லை. அமெரிக்க இளைஞர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே நோக்கமாகும். இதற்குரிய வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் அதிபராக பொறுப்பேற்றபோது, பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. தனியார் துறையில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மேலும் அதிகரிப்பதற்கு ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டும். நாம் எந்த இடத்தில் இருந்தோமோ அதே இடத்தில் இருக்கிறோம் என்பதை அமெரிக்க மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதிலிருந்து மீள்வதற்கு அனைத்து வழிகளையும் கண்டறிந்து அதைச் செயல்படுத்தி வருகிறோம்.

குடியரசுக் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சியினருக்கும் முன்னுரிமை விஷயத்தில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கும் என்று கருதவில்லை. வரியை எவ்விதம் குறைப்பது என்பதில் இரு கட்சியினருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல குடியரசுக் கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தின்போது கூட கடன், பற்றாக்குறை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதாகப் பேசினர்.

ஆனாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சில உபயோகமான பரிந்துரைகளை நான் அளித்தபோது அதை அவர்கள் நிராகரித்துவிட்டனர். பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பில் அவர்களது கொள்கைக்கும் எங்களது கொள்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை அவர்களிடம் கேட்கவேண்டும் போலுள்ளது. வெறும் வரிச் சலுகை மட்டுமே பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்து விடாது. அமெரிக்க மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான கொள்கையும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டிய அவசியமும் நமக்குள்ளது.

எரிசக்தி துறையில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கடந்த 2 ஆண்டுகளில் எட்டப்பட்டுள்ளது. கார்கள் மற்றும் டிரக்குகளின் எரிபொருள் சிக்கனத்துக்கான வரையறை புகுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியே சட்ட திருத்தம் தேவையில்லை. எரிபொருள் சிக்கனத்தைக் கருதி கார் தயாரிப்பாளர்கள் செயலாற்றினாலே போதுமானது என்றார் ஒபாமா.

எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. இதனாலேயே பல நல்ல செயல்திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை. இதற்குப் பதிலாக இரு கட்சியினரும் விரிவாக விவாதித்து முடிவு காண்பது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குடியரசுக் கட்சியினரின் ஒப்புதல் இன்றி எந்த ஒரு செயல்திட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியினர் எந்த முயற்சிக்கும் ஒத்துழைப்பு அளிக்க மாட்டார்கள் என்பது தெரிகிறது. வேலை வாய்ப்பில் ஸ்திரமான வளர்ச்சி எட்டவேண்டுமெனில் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒத்துழைப்பு அளிக்காவிடில் பற்றாக்குறை அதிகரிக்கும் அத்தகைய சூழலை ஏற்படுத்தமாட்டார்கள் என நம்புகிறேன் என்றார் ஒபாமா.

No comments: