Nov 11, 2010

மத்திய அரசுடன் நிபந்தனையுடன் பேச தயார்: மாவோயிஸ்டுகள் அறிவிப்பு.

"மத்திய அரசுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சு வார்த்தை நடத்த தயார்' என, மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பிற்கு செய்தியாளர்கள் சிலர் கடிதம் மூலம் கேள்விகளை அனுப்பியிருந்தனர். இது தொடர்பாக மாவோயிஸ்ட் பொதுச்செயலர் கணபதி, அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: தற்போது அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை. அதேவேளை எங்களது கோரிக்கைகளை ஏற்கும் பட்சத்தில், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். மாவோயிஸ்டுகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள பசுமை வேட்டை நடவடிக்கையை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். சிறையில் உள்ள மாவோயிஸ்டுகளை விடுதலை செய்ய வேண்டும். மாவோயிஸ்ட் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பேச்சு வார்த்தை என்று கூறி எங்களது தலைவர்களை அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இல்லையென்றால், கைது செய்து சிறையில் அடைத்து விடுகின்றனர். ஒருவேளை அரசுடன் நேரடி பேச்சு வார்த்தை நடத்தும் சூழல் எதிர்காலத்தில் ஏற்பட்டால், சிறையிலிருந்து விடுவிக்கப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களைக் கொண்டு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும்.

வன்முறையை கைவிட்டு அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அப்பாவி மக்களை ஒடுக்கும் போக்கை அரசு கைவிட்டால், மாவோயிஸ்டுகளும் தானாக வன்முறை பாதையை கைவிடுவர். மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஆயுதம் ஏந்துவது ஒன்றே வழியாகக் கருதுகிறோம். பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணும் வழிமுறையை மாவோயிஸ்டுகள் கைவிடவில்லை. அதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. ஒருவேளை அந்த சூழ்நிலை வந்தால், அமைதியான வழியைப் பின்பற்றி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் தயார். மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறியிருப்பது கண்டு நாங்கள் வியப்படையவில்லை. மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர் குரல் கொடுத்துள்ளார். மேலும், மேற்கு வங்கத்தில் அவர் ஆட்சிக்கு வந்தால் கூட, எங்களது அடிப்படை கொள்கைகளில் மாற்றம் இருக்காது. இவ்வாறு கணபதி கூறினார்.

No comments: