Oct 13, 2010

மாபியா கும்பல்களின் பிடியில் மெக்ஸிகோ நாடு.

மெக்சிகோ நகரின் பிரபல ஆடம்பர உணவுவிடுதி. மாலை நேர உணவை சுவைத்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், எதிர்பாராத அறிவிப்பொன்றால் அதிர்ச்சி அடைகின்றனர். “இன்னும் இருபது நிமிடங்களில் இங்கே ஒரு முக்கிய நபர் வருகை தர இருக்கிறார். அவர் விருந்துண்டு விட்டு செல்லும் வரையில் யாரும் இருப்பிடத்தை விட்டு அகலக் கூடாது. உங்கள் அனைவரதும் செல்லிடத் தொலைபேசிகளும் இப்போது பறிமுதல் செய்யப்படும். வி.ஐ.பி. விடுதியை விட்டு சென்ற பின்னரே திருப்பித் தரப்படும்.” சுமார் ஒரு மணித்தியாலமாக உணவுவிடுதியின் வாடிக்கையாளர்கள் மலசல கூடத்திற்கும் செல்ல விடாமல் தடுத்து வைத்த வி.ஐ.பி., ஒரு போதைவஸ்து கடத்தல் குழுவின் தலைவன்.

மெக்சிகோவில் மாபியா கும்பல்களின் அதிகாரம், அங்கே ஒரு நிழல் அரசாங்கத்தையே நடத்துமளவு வளர்ந்துள்ளது. இந்த வருடம் (2010) கோலாகலமாக நடந்த மெக்சிகோ புரட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களில் கிரிமினல்களின் நிழல் படர்ந்திருந்தது. சில வாரங்களுக்கு முன்னர்தான் ஒரு கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 70 இளைஞர்களின் சடலங்கள் உலகச் செய்தியானது. அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும்போது, போதைவஸ்து கடத்த சம்மதிக்காத அப்பாவி வெளிநாட்டு இளைஞர்கள் அவர்கள். மாபியாக்களின் உத்தரவுக்கு அடிபணியாத போலிஸ்காரர்களையே அங்கு சர்வசாதாரணமாக கொன்று வீசுகிறார்கள். விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. இதைவிட மாபியா கும்பல்கள் தமக்குள்ளே கணக்குத் தீர்க்கும் விதம் குரூரமானது. எங்கேயாவது தலை வேறு, முண்டம் வேறாக சடலம் கண்டெடுக்கப் பட்டால், அது போட்டிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கும்.

நன்றி; வினவு

No comments: