Oct 14, 2010

குடிமக்களின் உயிர்களை துச்சமாக மதிக்கும் இந்தியா போன்ற நாடுகள் சிலியிடம் இருந்து பாடம் கற்குமா?


சிலி,அக்.14:சிலி நாட்டின் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 33 தொழிலாளர்கள் 69 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அபார மீட்பு பணியால் ஒட்டுமொத்த சிலி நாடும் உற்சாகக் கொண்டாட்டத்தில் மிதக்கிறது.தென் அமெரிக்க நாடு சிலி. அதன் அடகாமா பாலைவனப் பகுதியின் மலைப்பாங்கான இடத்தில் சான் ஜோஸ் என்ற தாமிர சுரங்கம் உள்ளது. மலையைக் குடைந்து வட்ட வடிவில் சுரங்கத்தின் பாதை 700 மீட்டர் ஆழம் வரை செல்கிறது. அதன் நடுப்பகுதியின் பக்க சுவர்கள் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திடீரென இடிந்து விழுந்தன. அதனால், ஏற்பட்ட பள்ளத்தில் பெரிய பாறை விழுந்து சுரங்கத்தை மூடிக் கொண்டது. அப்போது சுரங்கத்திற்குள் பணியில் இருந்த 33 தொழிலாளர்களும் கும்மிருட்டில் சிக்கிக் கொண்டனர்.

விபத்தை கேள்விப் பட்டதும் ஈக்வடார் நாட்டில் பயணம் சென்றிருந்த சிலி அதிபர் செபஸ்டியன் பினெரா உடனடியாக நாடு திரும்பினார். சுரங்கத்துக்கு விரைந்த அவர், எவ்வளவு செலவு, எத்தனை வசதிகள் தேவைப்பட்டாலும் சரி, தொழிலாளர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அத்துடன், அன்று முதல் நேற்று வரை சான் ஜோசில் அடிக்கடி முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தினார். சிக்கியவர்களை மீட்க பாறைகளை குடைவதற்கு மாதக் கணக்கில் ஆகும் என்பதால், முதலில் சிறிய ஆழ்துளை போடப்பட்டது. அதன் வழியே அதிக சிக்னல் கொண்ட போன் அனுப்பப்பட்டது. அதன் மூலம் வெளியே இருந்து அதிபர், மீட்பு படையினர், தொழிலாளர்களுடன் தொடர்ந்து ஆறுதலாகப் பேசி தைரியம் அளித்து வந்தனர்.

அந்த சிறிய துளை மூலம் தண்ணீர், ஆக்சிஜன், மருந்துகள் அளிக்கப்பட்டு வந்தன. அமெரிக்காவின் நாசா உட்பட பல நவீன அமைப்புகள் மற்றும் நிபுணர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். மனிதனின் சுற்றளவில் கேப்சூல் வாகனம் சென்று வரக்கூடிய சுற்றளவில் ட்ரில்லிங் போடும் பணி தொடங்கியது. சுமார் 700 மீட்டர் ஆழத்துக்கு அந்த பணி 68 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முடிந்தது.அந்த துளை வழியாக பலமான இரும்பு கம்பியுடன் இணைக்கப்பட்ட ‘போனிக்ஸ்’ என்ற ஒரு ஆள் மட்டுமே கொள்ளக்கூடிய கேப்சூல் உள்ளே அனுப்பப்பட்டது. அதை நிபுணர் ஒருவர் இயக்கினார். அது சுரங்கத்தினுள் செல்லும் பாதை திரையில் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர்கள் இருப்பிடத்தை கேப்சூல் நேற்று அதிகாலை அடைந்தது.

மீட்பு கேப்சூலில் சிலி தேசியக் கொடி வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. அதன் ஏறி, இறங்கும் பாதை வளைவுகளை கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தோல்விக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் அஞ்சினர். ஒவ்வொரு 8 பேர் வெளியே வந்து சேர்ந்ததும், கேப்சூலுக்கு தீவிர சர்வீஸ் நடந்தது. இரண்டு மாதத்துக்கு பிறகு இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதால் தொழிலாளர்களுக்கு தலைக் கவசம், கூலிங் கிளாஸ் கட்டாயமாக்கப்பட்டது. சுரங்கத்தின் ஆழம் & பூமியின் மேலே நிலவும் காற்றின் வித்தியாசம், தொழிலாளரை பாதிக்காமல் இருக்க கேப்சூலில் பொருத்தப்பட்ட சிலிண்டர் மூலம் தேவையான அளவு ஆக்சிஜன் வெளியாகும்படி செய்யப்பட்டிருந்தது.

உலகிலேயே சுரங்கத்தில் இருந்து 69 நாட்களுக்கு பிறகு உயிருடன் தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இதுவே முதல்முறை. இதற்கு முன் 25 நாட்களாக தவித்த சிலர் மீட்கப்பட்டனர். இந்த சுரங்கத்தில் தொழிலாளர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை, இனி சுரங்கம் திறக்கப்படாது என்று அதிபர் செபாஸ்டியன் நேற்று அறிவித்தார். இந்த விபத்து, மீட்பு பணிகள் இரண்டு மாதம் தொடர்ந்த செய்தி என்பதால் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. 40நாடுகளை சேர்ந்த 1,500 பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் அங்கு நேற்று முன்தினம் முதல் குவிந்தனர்.வெளியே காத்திருந்த அதிபர் செபாஸ்டியன் தொழிலாளர்களை கட்டித் தழுவி வரவேற்றார். தொழிலாளர்களை சந்திக்க ஒருவருக்கு 3 உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சில நிமிட சந்திப்புக்கு பிறகு, தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

சுரங்கத்தை சுற்றி டாக்டர்கள், பரிசோதனை நிபுணர்கள் என டென்ட் அமைத்து தங்கியிருந்தனர். போனில் தகவல் பரிமாறி, உடல்நிலை சரியில்லாத தொழிலாளருக்கு துளை வழியே மருந்துகள் அனுப்பப்பட்டன. சிலரது சிறுநீர், ரத்தம் கூட பெறப்பட்டு பரிசோதித்து சிகிச்சை தரப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர்களுடன் தொடர்பு வைத்திருந்த அதிகாரிகள் திரவ உணவுகள், சொந்தங்களின் கடிதங்களையும் துளை வழியே அனுப்பி வந்தனர். செல்போன் அளவில் வீடியோ பிளேயர் அனுப்பப்பட்டது. அதில் சினிமா பார்த்து பொழுதை கழித்தனர். டிவி அலைவரிசை சிக்னலை அனுப்பி, கால்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்புகூட தொழிலாளர்கள் பார்த்தனர். உடற்பயிற்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கேப்சூலுக்குள் பொருந்தும் வகையில் அனைவரது உடல் எடை, அளவை கட்டுப்படுத்த போன் மூலம் உடற்பயிற்சி ஆலோசனைகள் தரப்பட்டது. அத்தனை வசதிகள் கிடைத்தாலும், சுரங்கத்துக்குள் 69 நாட்கள் இருந்தது நரகத்தை நேரில் அனுபவித்தது போல இருந்ததாக மீட்கப்பட்டவர்களில் பலர் கூறினர்

No comments: