May 29, 2014

தாமரையும் கையும் வேறல்ல! SDPI!

மே 30/2014: இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவில் பா.ஜ.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலையும், தேர்தலுக்கு பின்பு ஒரு நிலையும் என்கிற  இரட்டை வேடம் போடுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழக மக்கள் பொங்கியெழுந்த போது, இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தவறிவிட்டது எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழீழம் கொண்டு வருவோம் என பாரதிய ஜனதாவின்  தமிழக தலைவர்களும், வைகோ, நெடுமாறன் போன்றோரும் கூறி வந்தனர்.
மேலும் மோடி தமிழகத்திற்கு வந்த போது சிறிய நாடான இலங்கை தமிழக மீனவர்களை தாக்கி அழிப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டுடனான அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்து தமிழக மீனவர்களின் நலனையும், தமிழர்களின் உணர்வுகளையும் காப்போம் என பிரச்சாரம் செய்தார். இதற்காக இராமேஸ்வரத்தில் கடல் தாமரை என்ற பெயரில் தனி மாநாடே சுஷ்மா தலைமையில் நடத்தப்பட்டது..
ஆனால் தற்போது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளாரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் அவர்களின் இரட்டை நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசயத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதை தெளிவாக அறியலாம். 
இதேபோன்று காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகளை போட்டும், பேச்சுவார்த்தை என்பது கோழைத்தனம் எனவும் தேசப்பற்றை ஓங்கி உரைத்த பாஜக, தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.
வெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. வெளியுறவுத் துறைக் கொள்கையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க. இருக்கும். பா.ஜனதா, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது தற்போது நிரூபணமாகி வருகிறது. மேலும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸை பா.ஜ.கவும், பா.ஜ.கவை காங்கிரஸும் எதிர்க்கின்றன. உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்று சோசியல் டாமாகிரடிவ் பார்டி ஒப் இந்தியா ( SDPI ) கட்சி .தெரிவித்துள்ளது.
- SDPI -

No comments: