Jul 19, 2011

கடனில் மூழ்கும் அமெரிக்கா கவலையில் சீனா!

JULY 20, பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது. தற்போதைய சூழலில், சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மொத்தக் கடன், தற்போது 14.3 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, கடன் பத்திரங்களாக, அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டாலர் அளவுக்கு வாங்கியுள்ளது. 2010 அக்டோபரில், இது 906 பில்லியன் டாலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.

2009, மார்ச் 12ம் தேதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ,"அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன். அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலை நிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள்' என்று, வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்' என்றார். சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு, 3 டிரில்லியன் டாலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டாலர் வடிவில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: