Jul 22, 2011

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அசத்தும் அரசு பள்ளிக்கூடம்!

JULY 23, மேட்டுப்பாளையம்: "டிப்-டாப்' சீருடை, லேப்-டாப் கம்ப்யூட்டர், பவர்-பாயின்ட் படிப்பு, நுனி நாக்கில் ஆங்கிலம் என அசத்துகின்றனர், அந்த பள்ளியின் மாணவர்கள். இவர்கள் யாரும் ஊட்டி சர்வதேச பள்ளிகளில் படிக்க வில்லை கோவை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் தான்.

தனியார் பள்ளிகளே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஹைடெக் ஆக வளர்ந்து வருகிறது, இந்த பள்ளி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக, சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தன்னை அடையாளம் காட்டி வருகிறது. மாணவர்கள் அழகான சீருடை அணிந்து, மிடுக்கான தோற்றத்துடன், பள்ளிக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில், பவர் பாயின்ட் புரோஜக்டரில் ஆசிரியர்கள் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுக்கின்றனர்.

மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, மாணவர்கள் ஆங்கிலம் பேசுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பள்ளி தலைமை ஆசிரியை கூறியதாவது: இப்பள்ளியில் காந்தவயல், காந்தையூர், உளியூர் ஆகிய மலைவாழ் கிராமங்கள் மற்றும் லிங்காபுரத்தை சேர்ந்த குழந்தைகள் படிக்கின்றனர். மொத்த மாணவர்களில், 50 சதவீதம்பேர் மலைவாழ் இனத்தை சேர்ந்தவர்கள்.

நன்கொடை பெற்று அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.  தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்கை, நூலக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் திறன் வளர்க்க அறிவியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் உள்ளன. "டிவிடி' புரோஜக்டரில் திரையிட்டு கற்பிக்கப்படுவதால், நன்கு ஆங்கிலம் கற்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வம் குறையாமல் வருகின்றனர்.

வாழ்க்கை கல்வியை வளப்படுத்தும் வகையில் களப்பயணம், யோகா, ஸ்போக்கன் இங்க்லீஷ், ஓவியப் பயிற்சி, இசையுடன் கூடிய கூட்டு உடற்பயிற்சி, கணிதக் கல்வி, ஆடல்பாடல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவர்கள்,  பரிசுகள் பெற்றனர்.  ஆசிரியர்களின் கடும் முயற்சியால், இன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆசிரியர்கள் நன்கு பாடம் சொல்லி கொடுப்பதால், மூன்று மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

No comments: