Jun 7, 2011

செவ்வாய் கிரகத்து அதிசய சிறுவன்!

JUNE 8, பிறந்து பதினைந்தே நாட்கள் ஆன குழந்தையின் தலை நிற்குமா? நான்கு மாதத்திலேயே தாயை "அம்மா" என்றழைக்குமா?

ஒன்றரை வயதிலேயே செய்தித்தாள் தலைப்புச் செய்திகளைப் படிக்குமா? இரண்டு மூன்று வயதிலேயே விண்வெளியைப் பற்றி விளக்கிக் கூறும் அறிவு கிட்டுமா?

ரஷ்யாவில் சைரினொவிஸ்க் என்னும் நகரத்தில் ஜனவரி 11, 1996ல் பிறந்தவன் போரிஸ் கிப்ரியானோவிச், சுருக்கமாக போரிஸ்கா. மேலே கேட்கப்பட்ட அத்தனை கேள்விக்குறிகளையும் ஆச்சரியக்குறிகளாக மாற்றியவன். தற்போது 12 வயதாகிறது இந்தச் சிறுவனுக்கு.

இவனது அசாத்தியமான ஆற்றல்களைக் கண்டு கவலைப்படுகின்றனர் பெற்றோர். புதிரான சில வழிகளின் மூலம் அவனுக்குள் தகவல்கள் ஊட்டப்படுவதாக எண்ணுகின்றனர்.

இரண்டு வயதிலேயே கிண்டர் கார்டனில் சேர்க்கப்பட்ட போரிஸ்காவின் மொழியாற்றல், நினைவுத் திறன், சுட்டித்தனம் போன்றவை அசாதாரணமாய் இருந்ததாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்காமலே தானாக பல திறமைகள் அவனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் சம்மணமிட்டு அமர்ந்து செவ்வாய் கிரகம், அங்கு நிலவிய வாழ்க்கை முறை, இதர கிரக அமைப்புகள் போன்றவற்றைப் பற்றி விவரிக்கிறானாம் போரிஸ்.

தான் செவ்வாய் கிரகத்திலிருந்து பிறப்பெடுத்து இங்கு வந்ததாகவும், இன்றும் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வசிப்பதாகவும், ஆனால் பயங்கரமான பேரழிவினால் தற்போது நிலத்தின் அடிப்பரப்பில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறான்.

மேலும் செவ்வாய் கிரக வாசியாக இருந்த போது பூமிக்கு ஆராய்ச்சிக்காக வந்து சென்றதாகவும் கூறுகிறான். லெமூரியக் கண்டத்தின் ஆய்வுப் புத்தகம் ஒன்றை அவனது தாய் அவனுக்குக் கொடுத்த போது ஆச்சரியத்துடன் பார்த்த போரிஸ் லெமூரியா கண்டத்தின் அழிவு பற்றி பரபரப்பாக விவரிக்க ஆரம்பித்தான்.

இதெல்லாம் எப்படித் தெரியும் என்று கேட்டால் எல்லாம் நினைவில் இருக்கிறது என்று பதிலளிக்கிறான். பெரிய பிரமிடுகளைப் பற்றிப் பேசும் போரிஸ் மனிதத் தலை, சிங்க உடம்பாக காட்சியளிக்கும் Sphinx பிரமிடுக்குள் மனித வாழ்க்கையின் ரகசியங்கள் இருக்கின்றன என்றும், அதைத் திறப்பதற்கான வழி அதன் காதுப் பகுதியில் உள்ளது போலத் தெரிவதாகவும் விவரிக்கிறான்.

போரிஸ்காவைப் போன்ற குழந்தைகள் பிறப்பது சமீப காலத்தில் சாத்தியமாகியுள்ளது என்றும் பொதுவாக 1980க்குப் பின்னர் பிறந்த குழந்தைகளில் சிலருக்கு இது போன்ற இயற்கையின் கொடை கிடைத்திருக்கிறது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இத்தகைய தன்மையுடையோரை "இண்டிகா குழந்தைகள்" என்றும் அழைக்கின்றனர்.

மாறிவரும் பூமியின் காந்தப் புலனானது 2012 காலகட்டத்தில் மிகப் பெரும் அழிவு ஒன்றை ஏற்படுத்தும் என்று போரிஸ் கூறுகிறான். செவ்வாயில் ஏற்பட்ட பேரழிவிற்கு அணு ஆயுதப் போரே காரணமென்றும், கதிரியக்கங்களின் வீரியம் காரணமாக தப்பிப் பிழைத்தவர்கள் வெளியே வரமுடியவில்லை.

மேலும் அவர்கள் பாதுகாப்பான கவச அறைகளில் பாதாளத்தில் வாழ்வதாகவும் கூறும் போரிஸ் அவர்கள் கார்பன்-டை-ஆக்ஸைடை சுவாசித்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறுகிறான். பூமியைப் பொறுத்த வரை ஆக்ஸிஜனை மட்டுமே சுவாசிக்க முடியும் என்றும், ஆனால் இந்த பிராணவாயு மனிதர்களின் வாழ்நாளைக் குறைப்பதாகவும் சொல்கிறான்.

விண்வெளியைப் பற்றி சகலமும் தெரிந்து வைத்திருக்கும் போரிஸ் UFOக்களைப் பற்றியும் நிறைய பேசுகிறான். செவ்வாயில் இருக்கும்போது ஸ்பேஸ்கிராப்டை இயக்கும் பயிற்சி பெற்றிருந்ததாகவும் கூறுகிறான். இவனை வியப்புடன் நோக்கும் விஞ்ஞான உலகம், விஞ்ஞான பேராசிரியர்களே சரளமாக உரையாடுவதில் உள்ள சிக்கல்கள் இவனுக்கு இல்லை எனத் தெரிவிக்கிறது.

போரிஸ்காவைப் பொறுத்தவரை,"கள்ளங்கபடமில்லாத அன்பும், எதையும் மன்னிக்கும் தயாள குணமுமே மக்களின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி என்றும், இதைத் தாண்டிய எந்தவொரு விஷயமும் மனித குல அழிவிற்கு வழிவகுக்கும்" என்கிறான்.

No comments: