Jun 7, 2011

தவளை தன் வாயால் கெடும் என்பது இதுதானா !!!

புதுடெல்லி,  ஜுன். 7 ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் யோகா குரு ராம்தேவ் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்து வைத்திருக்கும் அவர், அதற்கு உரிய வரிகட்டி வருகிறாரா என்று விசாரணை தொடங்கியுள்ளது.

ராம்தேவ் உலகம் முழுவதும் மூலிகை மருந்து விற்பனை செய்து வருகிறார். அதில் மனித எலும்பு கழிவுகள் சேர்த்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அதேபோல ராம்தேவ் குட்டி தீவு ஒன்று வாங்கி இருப்பதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மேலும் அவரது வருவாய்க்கு சரியான கணக்கு இல்லை. இதையடுத்து ராம்தேவ் சொத்து, செலவு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் ராம் தேவின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

நேபாள நாட்டைச் சேர்ந்த அவர் ஒரு கிரிமினல் குற்றவாளி என்று காங்கிரஸ் அம்பலப்படுத்தியது. அவரிடம் தற்போது இந்திய பாஸ்போர்ட் உள்ளது. அவர் பாஸ்போர்ட்டில் தில்லு முல்லு செய்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு கூறப்படுகிறது.இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறியதாவது:-

ராம்தேவ் நிழல்போல ஆச்சார்ய பாலகிருஷ்ணன் இருந்து வந்தார். நேபாள நாட்டைச் சேர்ந்த அவர் இந்தியாவுக்கு தப்பி ஓடி வந்து அடைக்கலம் புகுந்துள்ளார். தஞ்சம் கேட்டு வந்த அவர், இந்திய பாஸ்போர்ட் பெற்றிருப்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவர் என்னென்ன மோசடி செய்து பாஸ்போர்ட் பெற்றார் என்று விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

இதற்கிடையே ஆச்சார்யா பாலகிருஷ்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென மாயமாகி விட்டார். அரசுடன் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது ராம்தேவ் சார்பில் இவர்தான் கையெழுத்திட்டார். அவர் தலைமறைவாகி விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கு ராம்தேவ் பதில் கூறுகையில், மத்திய அரசு எங்களை அழிக்க முயல்கிறது. எனவே பாலகிருஷ்ணனை நாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்றார்.

ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர் மீது எழுந்துள்ள சர்ச்சைகளால் ஊழலுக்கு எதிரான ராம்தேவ் போராட்டம் எதிர்பார்த்த வெற்றியை தருமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

No comments: