Apr 20, 2011

உண்மையான மக்கள் போராட்டமே ஊழலை ஒழிக்கும்!!

ஆதர்ஸ் ஊழல், அலைக்கற்றை ஊழல், இராணுவ நிலபேர ஊழல், எஸ் பேண்ட் ஊழல், காமன்வெல்த் ஊழல் என்று அடுக்கடுக்காக தினம் ஒரு ஊழலாக வெளிவந்து மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறது.

தீர்க்கமான விழிப்புணர்வு இல்லாவிடினும் மக்கள் ஊழலுக்கெதிரான மனோநிலையில் இருக்கிறார்கள்.

இதை இப்படியே விட்டால், மக்கள் கிளர்ந்தெழுந்து ஊழலுக்கெதிரான போராட்டங்களை கட்டியமைத்து விட்டால்அது தமக்கும் தம் எஜமானர்களுக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

அதை தணித்தேயாகவேண்டிய தேவையுடன் இருக்கிறார்கள். அதனால்தான் உண்ணாவிரதம், மெழுகுதிரி ஏந்துதல் போன்ற உப்புமா போராட்டங்களை ஆதரித்து ஊடகங்கள் வழியே ஊழல்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறுவதைப் போல சித்தரிக்கிறார்கள்.

இதன் மூலம் மக்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிகால் தேடித்தருகிறார்கள். இதோ கல்லெறிந்து விட்டோம் மாங்காய் விழவேண்டியது தான் மிச்சம் என்று பசப்புகிறர்கள்.

ஆக்டோவியன் ஹ்யூம், அன்னிபெஸண்ட் ஆகிய இரண்டு வெள்ளையர்கள் உருவாக்கிய காங்கிரஸ் கட்சி தான் சுதந்திரத்தையும் கடலை மிட்டாயையும் வாங்கித்தந்தது.

என்று உருப்போட்டு நம்ப வைத்திருப்பது போல் அன்னாவின் ஐந்து நாள் உண்ணாவிரதம் ஊழலை ஆவியாக்கி இல்லாமல் செய்துவிடும் என்று நம்பச் சொல்கிறார்கள்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த காந்தியைக் கொண்டு மக்கள் போராட்டம் மிகைக்கும் போதெல்லாம் அகிம்சை சத்தியாக்கிரகம் ஒத்துழையாமை போன்ற கூத்துகளை அரங்கேற்றினார்கள்.

காந்தி கைதாகி சிறையில் இருந்து கொண்டு மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வைத்த போலவே இந்த இரண்டாம் காந்தியும் ஊழலுக்கெதிரான மக்களின் உணர்வை மழுங்கடிக்க முயன்றிருக்கிறார்.

எது ஊழலை ஒழிக்கும்? பொழுது போகாமல் மெழுகுதிரி ஏந்துவதா? சமரசமற்று மக்களைத் திரட்டி போராடுவதா?

இதோ விருத்தாச்சலத்தில் தோழர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள், இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மெய்யாகவே நீங்கள் ஊழலை ஒழிக்க விரும்பினால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

அன்னா ஹசாரேவின் ஐந்து நாள் உண்ணாவிரதமோ, லோக்பால் மசோதாவோ ஊழலை ஒழித்துவிடும் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை.

No comments: